2011-12-26 14:00:26

இலங்கை ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி


டிச.26,2011. இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னையக் காலக்கட்டத்தில் இடம்பெறும் கிறிஸ்மஸ் பெருவிழா, தலத்திருச்சபைக்கு முன் பல்வேறு சவால்களை வைத்துள்ளதென்று தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் உரைத்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
மக்களால் உருவாக்கப்பட்ட பிரிவினைகளான ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைத் தாண்டி, வாழ்வெனும் கொடை தொடர வேண்டும் என இக்கிறிஸ்மஸ் பெருவிழா நமக்கு நினைவூட்டுகிறதென தங்கள் செய்தியில் உரைக்கும் ஆயர்கள், ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் ஆழமான மதிப்பு, ஒருமைப்பாடு மற்றும் ஒப்புரவின் தேவை போன்றவை உணரப்பட வேண்டும் என்று மேலும் கூறியுள்ளனர்.
ஒப்புரவு என்பது மேன்மேலும் தேவைப்படும் இன்றையச் சூழலில் நம் முற்சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, போரின் காயங்களைக் குணப்படுத்தும் சவால்களை மேற்கொள்வோம் எனவும் இலங்கை ஆயர்கள் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒரே கடவுளின் குழந்தைகள் என்ற உறுதிப்பாட்டு உணர்வுடன் ஒப்புரவு மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் நம் பணிகளை இருமடங்காக்குவோம் என கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஆயர்கள், சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் குடிபெயர்ந்தோரிடையே இறைவனைக் கண்டு கொள்ள முன் வந்து, அம்மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவோமாக எனவும் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் விண்ணப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.