2011-12-23 15:24:07

'மிகவும் மோசமான நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பெண்கள்'


டிச.23, 2011. உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக சர்வதேச நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் International Crisis Group (ஐ.சி.ஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது.
இன்றும் பல விதமான காரணங்களால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் வன்செயல் குறித்த அச்சங்களை எதிர்நோக்குவதாகவும், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட மற்றும் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிலையில், வடக்கு கிழக்கில், பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ்ப் பெண்கள், பாதுகாப்பு உணர்வு, உதவிகளுக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அவ்வமைப்பு விமர்சித்துள்ளது.
இந்த முன்னாள் போர் வலயத்தில் உள்ள பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில், சாதகமாக நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் தவறி விட்டது என்றும் அந்த அமைப்பு குறை கூறியுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவை உட்பட இலங்கை நிகழ்வுகள் குறித்த தனது கண்டுபிடிப்புக்கள் குறித்து ஐ.நா.வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு கேட்டிருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.