2011-12-23 15:18:27

மத்திய கிழக்குப் பகுதியில் மக்களாட்சி முயற்சிகளுக்குத் எருசலேம் இலத்தீன் ரீதித் திருச்சபைத் தலைவர் ஆதரவு


டிச.23, 2011. மத்திய கிழக்குப் பகுதியில் மக்களாட்சி ஏற்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் எருசலேம் இலத்தீன் ரீதித் திருச்சபைத் தலைவர் Fouad Twal.
அரபு நாடுகளில் மக்களாட்சியை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்துத் தனது கிறிஸ்மஸ் பெருவிழாச் செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Twal, சுதந்திரம் மற்றும் மக்களாட்சி நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
அதேசமயம், சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் உட்பட அனைத்து மக்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனியப் பிரச்சனை குறித்தும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Twal, வத்திக்கான் முன்வைத்துள்ள இரண்டு நாடுகள் தீர்வையையே தானும் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளார்.
இவ்விரண்டு நாடுகளும் தனித்தனியே செயல்படுவதற்கு உதவியாக, இவ்விரு நாடுகளுக்கு இடையே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளும் பாதுகாப்பும் கொண்ட ஒரு தீர்வு காணப்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.