2011-12-23 15:19:25

திருப்பீடப் பேச்சாளர் : மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஐந்து கூறுகள்


டிச.23, 2011. தன்னையே வழங்குதல், கடவுளில் நம்பிக்கை வைத்தல், மன்னிப்புக் கேட்டல், இறையன்பிடம் கையளித்தல், திருநற்கருணை ஆராதனை ஆகிய ஐந்தும் மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சிறந்த வழிகள் என்று திருத்தந்தை கூறியதை விளக்கிக் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என அனைவருடனும் திருத்தந்தை தனது கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு ஆற்றிய உரையை மேற்கோள்காட்டிப் பேசிய இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி, இவ்வாறு கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியில் “Octava Dies” என்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இக்காலத்திய நமது காலம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நன்னெறி, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் சவால்களை நமக்கு முன்வைத்துள்ளன என்ற திருத்தந்தையின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார்.
எனவே நெருக்கடியான காலங்களிலும் நல்ல மனிதராக வாழ முடியும் என்றும், ஒருவர் தன்னையே பிறருக்கு வழங்குவதன் மூலமும், இன்னும், கடவுளில் நம்பிக்கை வைத்தல், ஒப்புரவு திருவருட்சாதனத்தின் வழியாக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டல், இறையன்பிடம் கையளித்தல், திருநற்கருணை ஆராதணை ஆகியவை மூலமும் இம்மனித வாழ்வை மகிழ்ச்சியானதாக்க முடியும் என்று திருத்தந்தை கூறியதையும் சுட்டிக் காட்டினார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.