2011-12-23 15:18:15

திருத்தந்தை : வாக்லாவ் ஹாவெல், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக மிகத் துணிவுடன் போராடியவர்


டிச.23, 2011. செக் குடியரசின் முன்னாள் அரசுத்தலைவர் Vaclav Havel இறந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அந்நாட்டு அரசுத்தலைவர் Václav Klausக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
செக் குடியரசு முழுவதும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் இவ்வேளையில், தனது அனுதாபங்களையும் அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பிராக் நகர் புனித Vitus பேராலயத்தில் நடைபெறும் இறுதி வழியனுப்புத் திருப்பலியில் கலந்து கொள்ளும் அனைவருடன் தானும் இச்செய்தி வழியாக இணைவதாகத் தெரிவித்துள்ளார்.
செக் குடியரசில் மனித உரிமைகள் திட்டமிட்டு மீறப்பட்டு வந்த காலக்கட்டத்தில், அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக ஹாவெல் மிகத் துணிவுடன் போராடியதை நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, கம்யூனிச ஆட்சி வீழ்ந்து புதிய மக்களாட்சிப் பாதையில் நாட்டை வழிநடத்திய இவரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்குத் தான் மரியாதை செலுத்துவதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார்.
செக் குடியரசு மக்கள், தற்போது அனுபவிக்கும் சுதந்திர வாழ்வுக்குக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும், புதிய வாழ்வுக்கான உயிர்ப்பில் நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் ஆன்மீகப் பலமும் ஆறுதலும் கிடைப்பதற்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளிப்பதாகவும் திருத்தந்தை அந்த இரங்கல் தந்தியில் தெரிவித்துள்ளார்.
செக் குடியரசில் முக்கியமானதும் பெரியதுமான பிராக் நகர் புனித Vitus பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடக்கச்சடங்கில், பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன், பிரான்ஸ் அரசுத்தலைவர் நிக்கோலாஸ் சர்கோசி, அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் ஹில்லரி கிளிண்டன், முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன், போலந்தின் முன்னாள் அரசுத்தலைவர் லெக் வவென்சா உட்பட முன்னாள் அரசியல் கைதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கத்தோலிக்கரான, செக் குடியரசின் முன்னாள் அரசுத்தலைவர் Vaclav Havel ன் அடக்கச்சடங்குத் திருப்பலியை பிராக் பேராயர் Dominik Duka நிகழ்த்தினார்.
செக் குடியரசில், 1989ம் ஆண்டில் கம்யூனிசம் வீழ்வதற்கு முக்கிய காரணமாய் இருந்த Vaclav Havel, ஒரு நாடக ஆசிரியர் மற்றும் தைரியமான மனித உரிமை ஆர்வலர். அந்நாட்டின் கம்யூனிச ஆட்சிக்கு எதிரான தனது கொள்கைகளுக்காகச் சிறையில் இருந்தவர். 2003ம் ஆண்டு வரை அரசுத்தலைவராக பணியாற்றிய Vaclav Havel, தனது 75 வது வயதில் இம்மாதம் 18ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.