2011-12-23 15:22:53

இலங்கை அரசு மேற்கொண்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளுடன் தலத் திருச்சபையும் இணைந்துள்ளது


டிச.23,2011. இலங்கை அரசு மேற்கொண்டுள்ள துயர் துடைப்புப் பணிகளுடன் தலத் திருச்சபையும் இணைந்து அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 38,000 மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.
இலங்கையின் வட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 11,000 குடும்பங்களுக்கு 41 துயர் துடைக்கும் மையங்கள் வழியாக முழு வீச்சில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் காரித்தாஸ் மற்றும் தொன் போஸ்கோ மையங்கள் ஈடுபட்டுள்ளன.
இத்திங்கள் முதல் பெய்துவரும் பெரு மழை காரணமாக, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்கியுள்ளதென்று கிளிநொச்சியில் பணிபுரியும் பங்குத்தந்தை தேவதாஸ் ஜூட்தாஸ் கூறினார்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது வெள்ளத்தாலும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
போருக்கு பின் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தங்களுக்கு, இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கும் அளவு வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அப்பகுதியில் வாழும் அஞ்சலி தேவி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.