2011-12-22 15:10:38

நேபாளத்தை அமைதியிலும், வளமையிலும் ஒருங்கிணைப்பதே கிறிஸ்மஸ் காலத்தின் முக்கிய நோக்கம் - இயேசுசபைத் தலைவர்


டிச.22,2011. நேபாளத்தை அமைதியிலும், வளமையிலும் ஒருங்கிணைப்பதே கிறிஸ்மஸ் காலத்தின் முக்கிய நோக்கம் என்று நேபாளத்தின் இயேசுசபைத் தலைவர் அருள்தந்தை லாரன்ஸ் மணியார் கூறினார்.
நேபாளத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மதங்கள், மற்றும் இனங்கள் அனைத்திற்கும் இடையே ஒப்புரவை வளர்ப்பதே இந்த கிறிஸ்மஸ் காலத்தில் திருச்சபை மேற்கொள்ளும் முக்கிய வேண்டுதல் என்று, கடந்த 35 ஆண்டுகளாக நேபாளத்தில் தன் பணிகளைச் செய்துவரும் அருள்தந்தை மணியார் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
நேபாளம் இந்து பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், இங்குள்ள அனைத்து இந்துக்களும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக அமைவதில்லை என்று கூறிய அருள்தந்தை மணியார், ஒரு சில அடிப்படைவாதக் குழுக்களே இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று எடுத்தரைத்தார்.
அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகள் அவ்வப்போது இருந்தாலும், பொதுவாக மக்களிடையே கிறிஸ்மஸ் விழாவின் உற்சாகம் இருப்பதைக் காண முடிகிறதென்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.