பிலிப்பின்ஸ் நாட்டு புயலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள்
முழு வீச்சில் உதவிகள்
டிச.21,2011. பிலிப்பின்ஸ் நாட்டை அண்மையில் பெருமளவு சிதைத்துள்ள Sendong என்ற புயலினால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் முழு வீச்சில் உதவிகள் செய்து வருகின்றன. Cagayan
de Oro பெருமறைமாவட்டத்தின் பேராயர் Tony Ledesma கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் பிற
மனித நல அமைப்புக்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்
என்று கத்தோலிக்கத் துயர்துடைப்புச் சேவை நிறுவனத்தினர் கூறினர். டிசம்பர் 16,
கடந்த வெள்ளியன்று அந்நாட்டைத் தாக்கிய இந்த புயல் இதுவரை அந்நாடு சந்தித்த இயற்கைப்
பேரிடர்களில் மிகப் பெரியது என்றும், இப்பெருவெள்ளத்தால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
இறந்துள்ளனர் மற்றும், 800க்கும் அதிகமானோர் காணமல் போயுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. மலைப்பகுதியில்
பெய்த பெரு மழையால் உருவான வெள்ளம், மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தாக்கியதால்
அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதென்றும், புயல் மற்றும் வெள்ளத்தால் 143,000 மக்கள் வீடுகளை
இழந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.