2011-12-20 15:39:08

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 99


RealAudioMP3 அவிலா தெரேசா என்றழைக்கப்படும் இயேசுவின் தெரேசா தன் சிறுவயதிலே புனிதர்கள் மற்றும் மறைசாட்சிகளின் வாழ்க்கை வரலாற்றால் கவரப்பட்டார். தன்னுடைய ஏழாம் வயதில், தன்னை ஒத்த வயதுடைய தன் சகோதரர் ரொட்ரிக்கோஸை அழைத்துக்கொண்டு ஆப்பிரிக்கா நாட்டுக்குச் செல்ல முனைந்தார். ஏனெனில் அங்கு மூர் இன மக்களால் தலைவெட்டப்பட்டு மறைசாட்சியாக வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. வீட்டிலிருந்து சிறு தொலைவு சென்று கொண்டிருந்தபோது, அவர்களது மாமா ஒருவர், அவர்களைத் தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அதன் பிறகு துறவியாக மாறவேண்டும் என ஆசைப்பட்டு, அவர் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த சிறுகற்களைக் கொண்டு வீட்டின் உட்பகுதியில் அழகான அறைகளை அமைத்து அதில் வசிக்க ஆரம்பித்தார். இவ்வாறு சிறு வயதிலிருந்தே புனிதராக வேண்டுமென்ற ஆசை தெரேசாவின் மனதிலே ஆழமாக இருந்தது.
அன்பார்ந்தவர்களே! நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 99. இத்திருப்பாடலைத் தாவீது மன்னன் எழுதியிருக்கக்கூடும் என்றும், பாபிலோனிலிருந்து தங்கள் நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கட்டிய கோவிலில் பாடுவதற்கு ஏற்ப இத்திருப்பாடலில் மாற்றங்கைளச் செய்திருக்கக்கூடும் என்றும் விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்திருப்பாடலில் யாவே இறைவனை அரசர் என்பதற்கும் மேலாக அவரைத் தூயவராகப் பார்த்தனர். இறைவன் தூயவர் என்பதற்கு மனித எண்ணங்களைக் கொண்டு விளக்கமளிக்க முடியாது. ஏனெனில் அவரே தூய்மையின் ஊற்று. யாவே இறைவனை தவறே செய்யாதவராக, நீதி பிறழாதவராக, நேர்மையை நிலைநாட்டுபவராகப் பார்த்தனர் இஸ்ரயேல் மக்கள். மேகத்தூண் வழியாக உடனிருந்தவராகவும், வாழ்விற்குத் தேவையான நியமங்களைத் தந்தவராகவும் பார்த்தனர். அவர்கள் செய்த பாவங்களுக்காகக் கண்டித்தாலும், அவர்களை மன்னிக்கின்ற அன்புத் தந்தையாகப் பார்த்தனர். மொத்தத்தில், இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைத் தூயவராகப் பார்த்தனர். எனவேதான் இப்பாடலில் மூன்று முறை தூயவர் என்ற வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.

திருப்பாடல் 99: 3, 4 மற்றும் 8
மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக! அவரே தூயவர்.
வல்லமைமிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்; நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்; யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும் நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர்.

அன்பார்ந்தவர்களே! இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரை யாவே இறைவன் தூயவர்; அஞ்சுதற்குரியவர். ஆனால், நாம் பாவிகள். எனவே அவரை நாம் நெருங்க முடியாது என்ற மனநிலையில் வாழ்ந்தனர். ஆனால் இயேசு வந்தார். இறைவனைத் தந்தை என அழைத்தார். தந்தையாம் இறைவனோடு நெருங்கி உறவாட முடியும் என்று சொன்னார். நாமும் புனிதர்களாக முடியும் என்பதை தன் எடுத்துக்காட்டான வாழ்வால் நமக்குச் சொல்லிவிட்டார். எனவே புனிதத்தை நோக்கி வெற்றிநடைபோடவேண்டியது திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடைமை.

நம்மால் புனிதர்களாக முடியுமா? புனிதர்களாக என்ன செய்ய வேண்டும்?
சிறுவயதிலே நான் மறைக்கல்வியில் பயின்ற தலையாயப் புண்ணியங்ளைக் கடைபிடித்தால் போதும் புனிதராகிவிட முடியும் என நினைத்தேன். ஆனால் தலையாயப் புண்ணியங்களைக் கடைபிடிக்க வேண்டியது திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடைமையாகும். நம் கடைமையைச் செய்வதற்குப் பரிசு எதற்கு? அதோடுகூட இப்புண்ணியங்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக் கடைபிடிக்கா விட்டாலும், ஓரிரு புண்ணியங்களையாவது நாம் கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். குறைந்தது ஒரு புண்ணியம் கூட செய்யாத மனிதர்கள் இருக்கமுடியாது. இதனடிப்படையில் பார்த்தால், உலகில் வாழ்ந்து, மறைந்த எல்லோருமே புனிதர்கள் என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லையே.
எனவே கத்தோலிக்கத் திருச்பை ஒருவரைப் புனிதராக அறிவிக்கத் தேவையான காரணிகள் என்ன என தெரிந்துகொள்ள புனிதராக அறிவிக்கப்பட வேண்டியவரைப் பற்றி வத்திக்கானில் ஆய்வு செய்யும் குழுவிலுள்ள ஓர் அருட்பணியாளரிடம் கேட்டபோது அவர் சொன்னது இதுதான்.
கத்தோலிக்கத் திருச்பையிலே, இரண்டாம் நூற்றாண்டு முதலே புனிதர் பட்ட அறிவிப்பும், பிறகு அவர்களை வணங்குவதும் நடைபெற்று வருகிறது. துவக்க காலத்தில், மக்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் அதற்கென ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவினர் ஒருவரைப் புனிதராக அறிவிக்கத் தூண்டும் காரணிகளைப்பற்றி ஆய்வு செய்வர். அதன்படி புனிதர் என்பவர், இயற்கையாக நாம் கொண்டிருக்கிற பொதுவான புண்ணியங்களோடு, நற்குணங்களோடு சிறப்பாக ஏதாவது மற்றொரு புண்ணியத்தை தனதாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்த சிறப்பான புண்ணியம் அல்லது நற்குணம் அவரது வாழ்வில் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். அதோடு, மனிதர்களுக்கு வருகின்ற இயல்பான ஆசைகளை மேற்கொண்டு அப்புண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள அசிசி நகர் புனித பிரான்சிஸை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். செபவேளையில், அவர் கேட்ட நற்செய்தியை அப்படியே வாழ்வாக்கியவர். எளிமை என்னும் வார்த்தைப்பாட்டை வாழ்ந்து காட்டியதற்கு அவரை சிறந்த உதாரணமாகக் கூறலாம். தன் உடைமைகளையெல்லாம் துறந்து, தான் அணிந்திருந்த ஆடையையும் களைந்துவிட்டுத்தான் துறவகத்தில் நுழைந்தார். அவர் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு, தானும் இயேசுவைப்போல அனைத்தையும் துறந்து இறக்க விரும்பி, அத்துறவகத்தின் தலைமைத் தந்தையிடம் தன் உடைகளைக் களைந்து வெறும் தரையில் படுத்திருக்க அனுமதிகேட்டார். இவ்வாறு எளிமை என்பது இவரது வாழ்வில் இரண்டறக்கலந்திருந்தது நமக்குக் கண்கூடாகத் தெரிகிறது. எனவேதான் நாம் இன்று அவரைப் புனிதராக வணங்குகிறோம். நமக்காக இறைவனிடம் பரிந்துரைக்குமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறோம். இதுவே ஒருவர் புனிதராக அறிவிக்கப்படத் தேவையான முதற்காரணி.

அன்பார்ந்தவர்களே! ஒருவர் புனிதராக அறிவிக்கப்படத் தேவையானக் காரணி என கத்தோலிக்கத் திருச்சபைக் கருதுபவைகளில் அடுத்தது, மனிதர்களில் எழுகின்ற இயற்கையான, அறிவுப்பூர்வமானக் கேள்விகளைப் பொருட்படுத்தாமல் இறைபராமரிப்பில் மட்டும் நம்பிக்கை கொண்டு வாழ்வது.
இதற்கு சிறந்த உதாரணம் புனித சிலுவை யோவான். ஒருநாள் மதிய உணவு அருந்த அத்துறவகத்திலிருந்த துறவிகள் அனைவரும் உணவறையில் கூடினர். ஆனால் சாப்பிட உணவில்லை. அச்சமயத்தில் சிலுவை யோவான் வழக்கம் போல் இறைவன் உணவை ஆசீர்வதிக்க வேண்டுமெனக் கூறி செபித்தார். அப்போது மற்ற துறவிகள் “இங்கு உணவேயில்லை, ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டுமென இறைவனிடம் மன்றாடுகிறீர்கள், ஏன் உங்களுக்கு புத்தி பேதலித்து விட்டதா” என கேலி செய்தனர். ஆனால் சிலுவை யோவானோ இறைபாராமரிப்பில் நம்பிக்கைக் கொண்டு இறைவன் நமக்குத் தேவையானதைக் கொடுப்பார் என்று சொன்னார். அப்போது அழைப்பு மணி ஒலித்தது. வெளியில் யாரோ ஒருவர் துறவிகளுக்கு உணவு கொண்டுவந்திருப்பதாக சொல்லி கொடுத்து விட்டுச் சென்றாராம்.
இவ்வாறு, இறைபராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு ஏழைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த வின்சென்ட் தே பவுல், இளைஞர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த போஸ்கோ, ஆன்மாக்களை மீட்பதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த யோவான் மரிய வியான்னி, நோயாளிகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கொல்கத்தா நகர் அன்னை தெரேசா எனப் புனிதர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இவ்வாறு ஒவ்வொரு புனிதருக்குப் பின்னாலும், அவருக்கே உரித்தான சிறப்பான புண்ணியமும், இறைபராமரிப்பில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் ஊன்றுகோலாக இருந்திருக்கின்றன. இது போன்ற காரியங்கள் தெளிவு செய்யப்பட்டபிறகு புனிதராக அறிவிக்கப்பட வேண்டியவரின் பரிந்துரையால் ஏதேனும் அருள்அடையாளங்கள் நடந்திருக்க வேண்டும். அவரிடம் செபித்ததால் அந்த அருளடையாளம் நிகழ்ந்தது என உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன்பிறகு அவர் கத்தோலிக்கத் திருச்சபையில் அவர் புனிதராக அறிவிக்கப்படுவார்.

அன்பார்ந்தவர்களே! நம்மைப்போல மண்ணுலகில் பிறந்து வாழ்ந்த மனிதர்களை கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அறிவிப்பது நாம் அவர்களைப் பார்த்தும், அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தும் வியப்பதற்காக அல்ல. மாறாக, அப்புனிதர்களின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நமது வாழ்க்கையை நெறிப்டுத்திக்கொள்வதற்காகவே. நாமும் அவர்களைப்போல சிறந்த மனிதர்களாக வாழமுடியும். அதற்கான குணங்கள் நம்மில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை கண்டறிந்து அந்த புண்ணியங்களில் வளர வேண்டும்.
இதன்காரணமாகத்தான் பெரும்பாலும் புனிதர்களின் பெயர்கள், அவர்கள் பிறந்த, வாழ்ந்த, இறந்த இடங்களின் பெயர்கள், நமக்கு பெயர்களாக இடப்படுகின்றன. நாம் கொண்டிருக்கிற பெயர்கொண்ட புனிதர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவர்களைப் போல வாழ முயற்சிக்க வேண்டும்.
சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும், பொறியாளராக வேண்டும் என இலட்சியங்களோடு வளர்கிறோம். அவற்றை விடவும் மேலானது, முதன்மையானது நல்ல மனிதர்களாக புனிதத்தை நோக்கி வெற்றிநடை போடவேண்டும்.
நமக்குப் பிடித்த நடிகர், நமக்குப் பிடித்த விளையாட்டு வீரர், நமக்குப் பிடித்த அரசியல் தலைவர் என்றுசொல்லும்போது நமக்குப் பிடித்த புனிதர் என்பதும் கண்டிப்பாக இடம் பெறவேண்டும். எதாவது ஒரு புனிதரால் கவரப்பட்டு அவருடைய முன்மாதிரிகையோடும், ஆசியோடும் நாமும் புனிதத்தை நோக்கிப் பயணிப்போம்.








All the contents on this site are copyrighted ©.