2011-12-20 15:30:24

பிலிப்பைன்சில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் திருச்சபை நிறுவனங்கள் உதவி


டிச.20,2011. தென் பிலிப்பைன்சின் Mindanao தீவின் வடபகுதியில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் நிலச்சரிவுகளால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ள வேளை, இம்மக்களுக்கு இடர் துடைப்புப் பணிகளைச் செய்வதில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன திருச்சபை நிறுவனங்கள்.
திருச்சபை நிறுவனங்களின் இடர்துடைப்புப் பணிகள் பற்றிப் பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நிவாரணப்பணிகளின் ஜோ கரி, சுமார் ஆறு இலட்சம் பேர் வாழும் Cagayan de Oro நகரில், சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர், இவர்கள் பள்ளிகளிலும் உடற்பயிற்சி மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பார்க்கும் போது, இவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தெரிகிறது என்றும், இந்நகரின் 80 விழுக்காட்டுப் பகுதிக்குத் தண்ணீர் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வாஷி என்றழைக்கப்படும் புயலால் 13 மாநிலங்களில் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிலிப்பைன்சின் தேசிய இடர்துடைப்பு அவை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த இயற்கைப் பேரிடரில் சுமார் ஆயிரம் பேர் இறந்துள்ளவேளை, இது ஒரு தேசியப் பேரிடர் என்று பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino அறிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.