2011-12-20 15:30:05

டிசம்பர் 20, அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம்


டிச.20,2011. உலகளாவியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒருமைப்பாட்டுணர்வு அடித்தளமாக அமைய வேண்டுமென ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 20ம் தேதியான இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், அனைவருக்கும் பாதுகாப்பும் வளமையும் நிறைந்த எதிர்காலத்தைச் சமைப்பதற்கு சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுள்ளார்.
உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியுள்ளது, நிதிப் பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கு அரசுகளும் சமூகநலவாழ்வுக்குச் செலவழிக்கும் தொகையைக் குறைத்து வருகின்றன, உலகின் புதிய நெருக்கடிகள் பதட்டநிலைகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
நோய்களைத் தடுப்பதற்கும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சமத்துவமின்மைகளையும் அகற்றுவதற்கும் உலகில் வாய்ப்புக்கள் உள்ளன என்றுரைக்கும் பான் கி மூனின் செய்தி, உறுதியான வளர்ச்சியைக் காணவும், போர்களைத் தடுத்து நிறுத்தவும், மனித உரிமை மீறல்களை அகற்றவும், இயற்கைப் பேரிடர்களைக் குறைக்கவும் மனித சமுதாயம் சேர்ந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
“சர்வதேச ஒருமைப்பாட்டுணர்வின் திறமைக்கு ஒரு பரிசோதனை” என்ற தலைப்பில் 2011ம் ஆண்டின் அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம் அனுசரிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.