2011-12-20 15:28:52

குழந்தை நோயாளிகளை உரோம் மருத்துவமனையில் சந்தித்தார் திருப்பீடச்செயலர்


டிச.20,2011. கருத்துக்கோட்பாடுகள் அல்ல, மாறாக, வாழும் இறைவனை நோக்கி நாம் திரும்பி வருவதே இவ்வுலகைக் காப்பாற்றமுடியும் என்றார் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
உரோம் நகரின் 'பம்பினோ ஜேசு' குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை நோயாளிகளை இச்செவ்வாயன்றுச் சந்தித்தபோது உரையாற்றிய திருப்பீடச் செயலர், நம்மைப் படைத்தவராகவும், நம் சுதந்திரத்துக்கு உறுதி கூறுபவராகவும், அன்பின் அளவுகோலாகவும் இருக்கும் இறைவனைத் தவிர நம்மை வேறு யார் காப்பாற்றமுடியும் எனவும், அன்பு ஒன்றே நமக்கு மீட்பளிக்கிறது, ஏனெனில் இறைவனே நிலையான அன்பு என்றும் கூறினார்.
அன்பு உண்மை என்பதில் மகிழ்கின்றது, அந்த அன்பே உண்மை, நீதி மற்றும் அமைதியைத் தேடுவதற்கான சக்தியைத் தருகின்றது எனவும் குழந்தைகளிடம் உரைத்தார் கர்தினால் பெர்த்தோனே.
'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்?' என்ற திருப்பாடல் 121ன் முதல் வரிகளையும் மேற்கோள்காட்டிப் பேசிய திருப்பீடச்செயலர், துன்பகரமான வேளைகளில் அன்பின் சக்தி மீது, அதாவது, இறை சக்தி மீது நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
குழந்தை நோயாளிகளிடையே தன்னலமற்ற சேவையாற்றும் மருத்துவத் துறையினருக்கு தன் பாராட்டுதல்களையும் நன்றியையும் வெளியிட்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனே, பெற்றோர்களுக்கு தன் ஊக்கத்தையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.