2011-12-20 15:30:41

கிறிஸ்மஸ் கால பொது வேலைநிறுத்தம் குறித்து கந்தமால் கிறிஸ்தவர்கள் கவலை


டிச.20,2011. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடி இன சமூகச்சேவை குழு ஒன்று கிறிஸ்மஸ் கால பொது வேலைநிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அரசிடம் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர் கந்தமால் கிறிஸ்தவர்கள்.
நல ஆதரவுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் கந்தமால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இம்மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை Kui Samaj Seva Samity என்ற அமைப்பு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்புடைய பிரச்னைகளால் நான்காண்டுகளாக கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடாமல் இருந்த கந்தமால் கிறிஸ்தவர்கள், தற்போது கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட தயாரித்து வரும் வேளையில் இத்தகைய பொதுவேலைநிறுத்தம் இடம்பெற உள்ளது குறித்து தங்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இதே அமைப்பு 2007ம் ஆண்டு இத்தகைய ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து நடந்த போராட்டத்தில் ஐந்து கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.ஏஸ் என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற இந்த Kui Samaj Seva Samity அமைப்பு எப்போதும் கிறிஸ்மஸ் காலத்திலேயே பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதன் நோக்கம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் கட்டக் புபனேஷ்வர் உயர்மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி குரு சந்தோஷ் டிகால்.








All the contents on this site are copyrighted ©.