2011-12-19 15:34:45

வாழ்ந்தவர் வழியில் டிசம்பர் 20...... ஃபெர்டினான்ட் எத்வார்த் புய்சன்


1841ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிரான்ஸ் நாட்டின் பாரிசில் பிறந்த ஃபெர்டினான்ட் எத்வார்த் புய்சன் (Ferdinand Édouard Buisson), உலகில், போர்கள் நிறுத்தப்படுவதற்குத் தளராமல் போராடியவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஃபெர்டினான்ட் புய்சன், போர்களை எதிர்க்கும் ஆர்வலர்களுடன் ஆர்வமுடன் ஈடுபாடு கொண்டிருந்ததாலும், குருக்களுக்கு எதிரான இவரது கண்ணோட்டத்தாலும், தீவிர சமூகவாதியாக இருந்ததாலும் பத்திரிகையாளர்களால் இழிவுபடுத்தப்பட்டார். குருக்களாலும் பழமைவாத வல்லுனர்களாலும் தாக்கப்பட்டார். அரசியல்ரீதியாகப் பழித்துரைக்கப்பட்டு அரசுப் பணியிலிருந்து கட்டாயமாக நீக்கப்பட்டார். இவர் தனது 87வது வயதில் போர் எதிர்ப்பு குறித்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் குழு ஒன்றினால் கடுமையாய்ப் பிரம்பால் அடிக்கப்பட்டார். முற்போக்குச் சிந்தனை கொண்ட கல்வியாளராகிய ஃபெர்டினான்ட் புய்சன், ப்ரெஞ்ச் ஆரம்பக் கல்வியை நவீனப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். 16 வயதில் தந்தையை இழந்ததால் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் படிப்பைக் கைவிட்டார். எனினும், பின்னாளில் படிப்பைத் தொடர்ந்தார். இவர் தனது 51வது வயதில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ப்ரெஞ்ச் பேரரசருக்கு நம்பிக்கையாய் இருப்பேன் என்று இவர் உறுதிமொழி எடுக்க மறுத்ததால் 1866 ம் ஆண்டில் ஆசிரியர் பணியை இழந்தார். நாடு கடத்தப்பட்டார். அதனால் சுவிட்சர்லாந்தில் குடியேறி Neuchâtel கழகத்தில் கல்விப் பணியாற்றினார். 1867ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அமைதி மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில்தான் அனைத்துலக அமைதி மற்றும் சுதந்திரக் கழகம் உருவாக்கப்பட்டது. நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த காலங்களில் இவர், “கல்வி வழியாக போரை ஒழித்தல்” (L'Abolition de la guerre par l'instruction), உட்பட சில முக்கிய நூல்களை எழுதினார். ப்ரெஞ்ச்-புருசியப் போரில் மூன்றாம் நெப்போலியன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புய்சன் பிரான்சுக்குத் திரும்பி பள்ளிகளின் நிர்வாகியாகத் தனதுப் பணியைத் தொடர்ந்தார். கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார். கட்டாயக் கல்வியையும் சமயச் சார்பற்ற கல்வியையும் ஆதரித்தார். அரசும் மதமும் பிரிந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய குழுவுக்குத் தலைமை வகித்தார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அனைத்துலக வாக்குரிமை குழுவில் அங்கம் வகித்தார். பெண்கள் அரசில் அங்கம் வகிப்பதை ஆதரித்தார். பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே சமாதானம் ஏற்படுவதற்காக, முதிர்ந்த வயதிலும் பயணங்கள் மேற்கொண்டு உரைகள் ஆற்றினார். 1914ம் ஆண்டு முதல் 1926ம் ஆண்டு வரை மனித உரிமைகள் கழகத்தைத்(LDH) தலைமையேற்று நடத்தினார். ப்ரெஞ்ச் கல்வித் திட்டமான சமயச் சார்பற்ற கல்வியை 1880களில் உலக அளவில் கொண்டு வர உதவினார். 1927ம் ஆண்டு ஜெர்மன் அரசியல்வாதி Ludwig Quidde டன் சேர்ந்து நொபெல் அமைதி விருது பெற்றார் ஃபெர்டினான்ட் புய்சன். இரண்டு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் தந்தையான இவர், 1932ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாளன்று தனது 91வது வயதில் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.