2011-12-17 15:13:43

டிசம்பர் 18, வாழ்ந்தவர் வழியில்... அந்தோனியோ ஸ்திராதிவாரி (Antonio Stradivari)


Violin, cello, guitar, viola, harp போன்ற நரம்பிசைக் கருவிகள் செய்வதில் தன்னிகரற்று விளங்கியவர் Antonio Stradivari. இவர் 1644ம் ஆண்டு இத்தாலியின் Cremona எனும் பகுதியில் பிறந்தார்.
17ம் நூற்றாண்டில் வயலின் செய்வதில் புகழ் பெற்றிருந்த Nicolò Amati என்பவரிடம் Antonio, தன் 12வது வயதில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1660ம் ஆண்டு தனது 16வது வயதில் முதல் வயலின் இசைக்கருவியை இவர் உருவாக்கினார். பயிற்சி காலத்தின் வெகு சில ஆண்டுகளிலேயே நரம்பிசைக் கருவிகள் உருவாக்குவதில் Antonio தலை சிறந்தவராய் விளங்கினாலும், தன் குருவான Amati 1684ம் ஆண்டு இறக்கும் வரை அவரது குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். அப்போது Antonioவுக்கு வயது 40. தன் குருவின் மரணத்திற்குப் பிறகு, Antonio தனித்து இசைக்கருவிகள் உருவாக்கி, புகழின் உச்சியை அடைந்தார். உலகில் இன்று விலைமதிப்பற்ற, புகழ்பெற்ற பல நரம்பிசைக் கருவிகள் ‘Stradivarius’ என்ற இவரது பெயரைத் தாங்கியுள்ளன.
மத்ரித் நகரின் அரண்மனையில் உள்ள இசை அருங்காட்சியகம், இலண்டன் மாநகரின் Royal Academy of Music, மற்றும் வாஷிங்க்டன் மாநகரில் உள்ள Library of Congress ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களில் Antonio Stradivari உருவாக்கிய நரம்பிசைக் கருவிகள் காட்சிப் பொருட்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற வியென்னா இசைக் குழுவினர் பயன்படுத்தும் பல நரம்பிசைக் கருவிகள் Stradivari பெயர் கொண்டவை.
Antonio Stradivari கைகளால் உருவாக்கப்பட்ட இசைக்கருவிகளை உலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இவர் உருவாக்கிய பல இசைக்கருவிகள் ஏலத்தில் விடப்படும்போது பெரும்தொகைகளை ஈட்டியுள்ளன. 1697ம் ஆண்டு Antonio உருவாக்கிய ஒரு வயலின், 2010ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி இணையதளத்தில் ஏலத்தில் விடப்பட்டபோது, 3.6 மில்லியன் டாலர்கள், அதாவது, 16 கோடியே 20 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அற்புதமான பல இசைக்கருவிகளை உருவாக்கி, உலகை இசையால் மகிழ்வித்து வந்த Antonio Stradivari, 1737ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தனது 93வது வயதில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.