2011-12-17 15:17:21

இரண்டாம் உலகப் போரின் போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கொரியப் பெண்களுக்கு நீதி கிடைக்க ஆயர்கள் வேண்டுகோள்


டிச.17,2011. இரண்டாம் உலகப் போரின் போது பல்லாயிரக்கணக்கான கொரியப் பெண்கள், ஜப்பானியப் படைவீரர்களின் பாலியல் இன்பத்திற்குப் பயன்படுத்தப்பட்டது மனித சமுதாயத்திற்கு எதிரானப் பயங்கரமான குற்றம் என்று தென் கொரிய ஆயர்கள் குறை கூறினர்.
இந்தப் பாலியல் வன்செயலுக்கு எதிராக இப்புதனன்று சியோலில், ஜப்பான் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட “ஆயிரமாவது வார” எதிர்ப்புப் பேரணியையொட்டி அறிக்கை வெளியிட்ட தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம், இந்த வன்செயல் கடவுளுக்கு எதிரான நிந்தை என்றும் கண்டித்துள்ளது.
இந்தப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்குமாறு, அடுத்து இடம் பெறவுள்ள கொரிய-ஜப்பான் உச்சி மாநாட்டில் வலியுறு்ததுமாறு தென் கொரிய அரசுத் தலைவர் Lee Myung-bak ஐக் கேட்டுள்ளது அந்த ஆணையம்.
இரண்டாம் உலகப் போரின் போது 11க்கும் 25 வயதுக்கும் உட்பட்ட சுமார் இரண்டு இலட்சம் கொரியப் பெண்கள், “வசதி நிலையஙகள்” என்ற இடங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இரவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகினர். கொரியா சுதந்திரம் அடைந்த பின்னரும் சில பெண்கள் அரசின் புறக்கணிப்பால் அந்த நிலையங்களிலே விடப்பட்டனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்தப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று 1992ம் ஆண்டு சனவரி 8ம் தேதி முதன் முதலாக எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.