2011-12-16 15:29:37

திருத்தந்தை : அமைதியை அடைவதற்கு மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்


டிச.16,2011. நீதியையும் அமைதியையும் வளர்ப்பதற்கு மனித மாண்பும் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2012ம் ஆண்டு சனவரி முதல் நாள் கடைபிடிக்கப்படும் 45வது அனைத்துலக அமைதி தினத்திற்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, இலாபம், பொருட்களைக் கொண்டிருத்தல், அவற்றின் பயன்பாடு ஆகியவற்றால் மனிதனின் மதிப்பு கடுமையாய் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
“நீதியிலும் அமைதியிலும் வாழ்வதற்கு இளையோரைப் பயிற்றுவித்தல்” என்ற தலைப்பில் அமைந்துள்ள இச்செய்தியில், நீதியையும் அமைதியையும் அடைவதற்கு அறநெறிகள் பற்றிய தேவை இளையோருக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளையோர் உலகிற்குப் புதிய நம்பிக்கையை வழங்க முடியும் என்பதில் தான் கொண்டுள்ள நம்பிக்கையையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, கல்வி பெறுவதற்கு அனைவருக்கும் உரிமையும் கடமையும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான, உறுதியான கல்வி, உண்மையிலும் சுதந்திரத்திலும் வழங்கப்படும் கல்வியாகும், சுதந்திரத்தைச் சரியான வகையில் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்படுவது, நீதியையும் அமைதியையும் வளர்ப்பதற்கு மையமாக அமைகின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.
பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள், நீதியிலும் அமைதியிலும் கற்றுக் கொடுப்பதற்கு குடும்பமே முதல் பள்ளிக்கூடம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, தங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய கல்வியை வழங்க வேண்டும் என்று தேர்வு செய்வதற்கு குடும்பங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமாறும், கல்வி வசதிகளை அனைவருக்கும் வழங்கவும் அரசியல் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
நாம் உண்மையான அமைதி ஆர்வலர்களாக இருப்பதற்கு முதலில் நம்மையே, பரிவு, ஒருமைப்பாடு, ஒன்றிணைந்து வேலை செய்தல், சகோதரத்துவம், வளங்களின் சமப்பங்கீடு போன்ற பண்புகளில் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அச்செய்தி கேட்டுள்ளது.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் Peter Kodwo Appiah Turkson தலைமையிலான குழு திருத்தந்தையின் இச்செய்தியை இவ்வெள்ளிக்கிழமை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.







All the contents on this site are copyrighted ©.