2011-12-16 15:28:23

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : நமது இக்கால உலகிற்குப் புனிதர்கள் தேவைப்படுகிறார்கள்


டிச.16,2011. கிறிஸ்தவ விசுவாசத்தில் மிகவும் ஆர்வமுடைய புனிதர்கள் இக்காலத்திற்குத் தேவைப்படுகிறார்கள், இத்தகைய புனித வாழ்வுக்கு அன்னை மரியா எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அன்னை மரியாவைப் போல செபத்தின் மகிழ்ச்சியைக் கண்டுணருமாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை,வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்திய போக்குகளால் அடித்துச் செல்லாதபடி கவனமாக இருக்குமாறும் வலியுறுத்தினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்திலும் வத்திக்கானிலும் வைப்பதற்கென பெரிய, சிறிய அளவிலான கிறிஸ்மஸ் மரங்களை வழங்கிய உக்ரேய்ன் நாட்டின் சுமார் 500 பேரை இச்சனிக்கிழமை திரு்பபீடத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்மஸ் மரமும், குடிலும் கிறிஸ்மஸ் சூழலை வெளிப்படுத்தும் கூறுகளாக இருக்கின்றன என்றும் கூறிய திருத்தந்தை, இன்றைய நுகர்வுக் கலாச்சாரச் சமுதாயத்தில் இத்தகைய ஆன்மீக மரபுகளைத் தொடர்ந்து காத்து வருமாறும் விண்ணப்பித்தார்.
உக்ரேய்ன் நாட்டு உதவி பிரதமர் Kolesnikov Borys உட்பட அரசு அதிகாரிகள், தலத்திருச்சபைத் தலைவர்கள் என அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 56 செ.மீ.விட்டம், 4.9 டன் எடையைக் கொண்ட உக்ரேய்ன் நாட்டுப் பெரிய கிறிஸ்மஸ் மரம், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இவ்வெள்ளி மாலையிலிருந்து மின் விளக்குகளுடன் அழகுறக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.