2011-12-16 10:46:22

டிச 17, 2011. வாழ்ந்தவர் வழியில் .... இராஜேந்திர லகிரி


அதிக விடுதலைப் போராட்ட வீரர்களை ஈந்த மேற்கு வங்கம் தந்த இன்னொரு வீரர் இராஜேந்திர லகிரி. இவர், வங்காளத்தின் பாப்னா மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் எனுமிடத்தில் பிறந்தார். இந்த ஊர் தற்போது பங்களாதேஷில் உள்ளது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட, இந்துஸ்தான் குடியரசு அமைப்பில் இணைந்து போராடினார். பெரும்பணக்காரரான இவரின் தந்தை இவரை வாரனாசிக்குப் படிக்க அனுப்பினார். இராஜேந்திர லகிரியோ, இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்து தக்சினேஸ்வர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் காவல்துறையால் தேடப்படுபவரானார். இந்தியக் குடியரசு அமைப்பினர் 1925 ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி நடத்திய ககோரி இரயில் கொள்ளையிலும் இவர் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டு, தக்சினேஸ்வர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்த ககோரி இரயில் கொள்ளை வழக்கிலும் இவர் பெயர் இருந்ததால், இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. திட்டமிட்ட ஆயுதப் புரட்சியினால் இந்திய மாநிலங்களின் ஐக்கியக் குடியரசினைக் கூட்டாட்சி அடிப்படையில் நிறுவுவது என்ற கொள்கையுடன் செயல்பட்ட இந்திய விடுதலை வீரர் இராஜேந்திர லகிரி, 1927ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி கோண்டா மாவட்ட சிறையில் தூக்கிலிடப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.