2011-12-15 15:22:30

பாகிஸ்தான், இலங்கை, உட்பட 11 நாடுகளின் புதியத் தூதர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


டிச.15,2011. மனித குலம் பயன்படுத்தி வரும் பல்வேறு தொடர்பு சாதனங்கள், மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவை நம்மை ஒரு குடும்பமாக இணைத்து வருவதை ஒரு சவாலாக ஏற்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டு, பிற நாடுகளில் தங்கி, பணியாற்றும் 11 நாடுகளின் புதியத் தூதர்களை இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றபின், அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள், மற்றும் புருண்டி, மொசாம்பிக், புர்கினா பாசோ உட்பட சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் 11 பேரை ஒரே குழுவாக திருத்தந்தை சந்தித்தார்.
மனித குலம் பயன்படுத்தும் தொடர்பு வசதிகளும், போக்குவரத்து முன்னேற்றங்களும் நமக்கு சவால்களாகவும், பிரச்சனைகளாகவும் மாறி வருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இந்த வசதிகளைக் கொண்டு மனித குலத்தை மென்மேலும் ஒருங்கிணைப்பதில் அனைவருக்கும் கடமை உள்ளது என்று எடுத்துரைத்தார்.
வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு கலாச்சாரங்களில் வாழ்ந்து வரும் நாம் அனைவருமே இளைய தலைமுறையினரை நல்ல மதிப்பீடுகளுடன் வளர்ப்பதில் தனி அக்கறை கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
வேலையில்லாத் திண்டாட்டம், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், தனி மனித உயிருக்குத் தகுந்த மதிப்பு அளிக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ள இளையோருக்கு தகுந்த முறையில் கல்வி வழங்குவது இன்றைய உலகின் மிக முக்கியமான கடமை என்று தன் உரையில் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
மனுக்குலத்தை இணைக்கும் வழிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஒவ்வோர் அரசும் இன்னும் தெளிவாகவும், தீவிரமாகவும் முடிவுகள் எடுப்பதற்கு தூதர்கள் வழியாக தான் வேண்டுகோள் விடுப்பதாக தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, அங்கு கூடியிருந்த தூதர்களுக்கும், அவர்கள் குடும்பங்கள் மற்றும் அவர்களது பணிகள் அனைத்திற்கும் தன் ஆசீர் உண்டு என்று வாழ்த்தினார்.








All the contents on this site are copyrighted ©.