2011-12-15 15:22:47

ஈராக்கில் இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு மத வெறிதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது திருப்பீடத் தூதர்


டிச.15,2011. ஈராக்கின் மோசுல் நகரில் இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு மத வெறிதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது என்றும், இந்த நிகழ்வுக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்றும் திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மோசுல் நகரில் இச்செவ்வாயன்று இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் தெளிவில்லாதபோது, இதனை ஒரு மதக்கலவரமாக எண்ணிப் பார்க்கக் கூடாது என்று ஈராக் நாட்டில் பணிபுரியும் திருப்பீடத் தூதர் ஆயர் Giorgio Lingua, FIDES செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இக்குற்றங்களைச் செய்தவர்களும், இக்கொலைகளுக்கான காரணங்களும் தெரியவில்லை என்று கூறிய மோசுல் நகரத்தின் கால்தீய ரீதிப் பேராயர் Amel Shamon Nona, கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
இதுபோன்ற வன்முறைகளால் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய திருப்பீடத் தூதர், சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பகல் நேரங்களில் நிகழும் என்றும், ஒவ்வொரு கோவிலும் தகுந்த முறையில் பாதுகாப்பு பெறும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, கடந்த ஒன்பது ஆண்டுகள் ஈராக்கை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க படைகள் இப்புதனன்று அந்நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறி உள்ளதாக முன்னணி ஊடகச் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.