2011-12-14 15:04:08

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் மக்கள் வன்முறைகளை களைந்து அமைதி காக்குமாறு சீரோ மலபார் உயர் பேராயர் அழைப்பு


டிச.14,2011. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் வன்முறைகள் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதென்றும், மக்கள் வன்முறைகளை களைந்து அமைதி காக்குமாறும் சீரோ மலபார் உயர் பேராயர் ஜார்ஜ் ஆலெஞ்சேரி கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த பிரச்சனையால் கடந்த பல நாட்களாக இவ்விரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நாளுக்கு நாள் கூடிவரும் பதட்ட நிலையைக் குறித்து தன் கவலையையும் வருத்தத்தையும் வெளியிட்ட உயர் பேராயர் ஆலெஞ்சேரி இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, தமிழ்நாடு, கேரளா, ஆகிய இரு மாநில அரசுகளும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதி மன்றம் இச்செவ்வாயன்று கூறியுள்ளது.
தற்போதைக்கு இந்த அணையால் பெரிய அளவில் ஆபத்துக்கள் ஏதுமில்லை என்பதால், எவ்வித கட்டுமான மாற்றங்களும் இந்த அணையில் உடனடியாக மேற்கொள்ளத் தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தின் இம்முடிவு கூறியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையைச் சுற்றி பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய கேரள காவல்துறை உயர் அதிகாரி பி.சந்திரசேகரன், இப்பகுதியில் பதட்ட நிலை இன்னும் குறையவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.