2011-12-14 15:25:10

காங்கோ நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பானவை கர்தினால் Laurent Monsengwo


டிச.14,2011. ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பானவை என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
காங்கோ நாட்டின் தேர்தல் ஆணையம் கடந்த வார இறுதியில் வெளியிட்ட முடிவுகளின்படி, தற்போதைய காங்கோ அரசுத் தலைவர் ஜோசப் கபிலா 49 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கபிலாவுக்கு அடுத்தபடியாக 32 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் Etienne Tshisekedi, தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும், தன்னைத் தானே அரசுத் தலைவர் என்றும் அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகள் உண்மைக்கும் நீதிக்கும் புறம்பானது என்று இத்திங்களன்று கூறிய கின்ஷாசா பேராயர் கர்தினால் Laurent Monsengwo, தோல்வி அடைந்துள்ள 10 வேட்பாளர்களையும் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தேர்தல் நடைபெற்றபோது பன்னாட்டு பார்வையாளர்களாகச் செயல்பட்ட Carter மையத்தைச் சார்ந்தவர்கள் இத்தேர்தலில் நடைபெற்றுள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, இந்த முடிவுகள் நம்பத்தகுந்தவை அல்ல என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தேர்தான் முடிவுகளுக்கு எதிராக வழக்கு வாதங்கள் இருந்தால், அவை ஆராயப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவுகள் டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.