2011-12-14 15:05:11

கச்சின் பகுதி புரட்சியாளர்கள் மீது இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்த அரசுத் தலைவர் ஆணை


டிச.14,2011. மியான்மாரில், கச்சின் பகுதி புரட்சியாளர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று மியான்மார் அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்திருப்பது நம்பிக்கை தரும் ஒரு முடிவு என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
மியான்மார் நாட்டில் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் கச்சின் பகுதியில், கடந்த சில மாதங்களாக போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
அண்மையில், பன்னாட்டு அரசுகள் விதித்து வரும் நிர்ப்பந்தங்களால் மியான்மார் மக்கள் குடியரசை நோக்கி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நேரத்தில், அந்நாட்டின் அரசுத் தலைவர் Thein Sein, கச்சின் மக்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இந்த அரசாணையும், மியான்மாரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளும் நம்பிக்கையைத் தருகின்றதென்று மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக் குழுவின் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ள இத்தருணத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து அனைத்து மக்கள் மத்தியிலும் ஒப்புரவையும், நல்லுறவையும் வளர்க்கும் முயற்சிகளை அரசும், பிற அமைப்புக்களும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆயர் Po Ray அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.