2011-12-14 15:25:46

உலகெங்கும் மலேரியா நோயின் தாக்கம் 25 விழுக்காடு குறைந்துள்ளது - ஐ.நா.அறிக்கை


டிச.14,2011. மலேரியா நோய்க்கு எதிராக, கடந்த பத்தாண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாக, உலகெங்கும் இந்த நோயின் தாக்கம் 25 விழுக்காடு குறைந்துள்ளது என்றும், இந்நோயின் முக்கிய பிறப்பிடங்களில் ஒன்றான ஆப்ரிக்காவில் இந்நோய் 33 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
கொசு வலைகளைப் பயன்படுத்துதல், தகுந்த மருத்துவ வசதிகள் ஆகியவை காரணமாக இந்நோயின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது என்று ஐ.நா.வின் ஓர் அங்கமான உலக நல வாழ்வு நிறுவனம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நோயின் தாக்கம் குறைந்திருந்தாலும், இன்னும் இந்த நோயை முற்றிலும் அழிக்கும் முயற்சிகளுக்கு உலக நாடுகள் தாராளமாக நிதி உதவிகள் தருவதைக் குறைத்தால், மீண்டும் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்று நல வாழ்வு நிறுவனத்தின் மலேரியா கட்டுப்பாட்டு இயக்குனர் இராபர்ட் நியூமன் கூறினார்.
மலேரியா பெருமளவு பரவியுள்ள 106 நாடுகளில் கடந்த ஆண்டு 21 கோடியே 60 இலட்சம் மக்கள் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாயினர் என்றும், இந்நோயினால் உயிர் துறப்பவர்களில் 90 விழுக்காடு மக்கள் ஆப்ரிக்காவில் உள்ளனர் என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டு நிகழ்ந்த இறப்புக்களைக் காட்டிலும் 2010ம் ஆண்டில் 36000 பேர் குறைவாக இறந்துள்ளனர் என்றாலும், உலகெங்கும் மலேரியா நோயினால் துன்புறுகிறவர்களில் 86 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்ற கவலையை இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.