2011-12-13 15:36:03

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 98


RealAudioMP3 அன்பார்ந்தவர்களே! இன்று நாம் சிந்திக்க இருப்பது திருப்பாடல் 98. இத்திருப்பாடலில் இஸ்ரயேல் மக்கள், நீதியை நிலைநாட்டுகிற நீதிபதியாக யாவே இறைவனைப் பார்க்கின்றனர். அவர்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தபோது, யாவே இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் வாக்குறுதியும், நம்பிக்கையும் அளித்தார்.
எசாயா 40: 1
அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.
பாபிலோனியாவிலிருந்து விடுதலை கிடைத்து விடும் என்று நம்பிக்கை அளித்தார். அவ்வாறே விடுதலையும் பெறச்செய்தார். அவர்கள் எருசலேம் திரும்பிய பிறகு, ஆண்டவர் சொன்னபடியே விடுதலையைப் பெற்றுத்தந்து விட்டார்; அவர் தம் நீதியை நிலைநாட்டிவிட்டார். உங்கள் ஆண்டவர் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார் என்று ஏளனம் செய்தவர்கள் வாக்கினைப் பொய்யாக்கினார். அவர்கள் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார் என்பதே இஸ்ரயேல் மக்களின் மனநிலை.
திருப்பாடல் 98: 2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
தான் தேர்ந்தெடுத்த இஸ்ரயேலுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் நீதி வழங்க வருகிறார். அவர் நீதியான தேவன். எனவே உலகை நீதியோடு ஆண்டிடுவார் என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் நம்பிக்கையைத்தான் திருப்பாடலாக வடித்திருக்கிறார்கள். இவ்வாறு நீதியான அரசரை போற்றிப்புகழ்ந்தனர். உலகனைத்திலுமுள்ள உயிரினங்களைத்தும் ஆண்டவரைப் புகழ வேண்டும் என அழைப்புவிடுக்கின்றனர்.

ஆண்டவரைச் சிறந்த நீதிபதி என்று இஸ்ரயேல் மக்கள் கருதினார்கள். ஆனால் அவர் எப்படிப்பட்ட நீதிபதி? ஒரு நீதிபதிக்குப் பல வேடங்கள் உள்ளன. அதாவது ஒரு குடும்பத்திலுள்ள ஓர் ஆண் தன் பெற்றோர்க்கு மகனாகவும், உடன்பிறந்தோர்க்குச் சகோதரனாகவும், தன் மனைவிக்குக் கணவனாகவும், தன் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் இருக்கிறார்.குடும்பத்தில் எதாவது பிரச்சனையென்றால் அவர் எந்த உறவாக இருந்து தீர்ப்புச் சொல்வார்? தந்தையாகவா அல்லது மகனாகவா அல்லது உடன்பிறந்தவராகவா?
யாவே இறைவன் நீதிபதிதான். ஆனால் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகள். அவரே அனைவருக்கும் தந்தை. எனவே அவர் கண்டிப்பான நீதிபதியாக இல்லாமல், அவர்களின் அன்புத்தந்தையாக இருந்துதான் அன்று நீதி வழங்கினார், இன்றும் அதே அன்போடும், பாசத்தோடும்தான் நீதி வழங்குகிறார். யாவே இறைவன், இஸ்ரயேலை தன் சொந்த மகளாகப் பார்த்தார்.
எசாயா 40:1
'அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.'
விடுதலைப் பயணம் 3:7
அப்போது ஆண்டவர் கூறியது; எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.
எனவேதான் இஸ்ரயேல் படும் துன்பங்களைப் பார்த்து, போதும் எனச்சொல்லி இஸ்ரயேலுக்கு விடுதலைப் பெற்றுத்தந்தார்.

பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இறைவனின் நீதி ஒரு தந்தையின் பாசமாகவும், பரிவாகவும்தான் வெளிப்பட்டது. இதற்கு மத்தேயு நற்செய்தி 20:1-16ம் பிரிவில் வருகின்ற திராட்சைத் தோட்ட நிலக்கிழார் உவமை மிகச்சிறந்த உதாரணம். வேலைசெய்த எல்லாருக்கும் ஒரு தெனாரியம். நாள் முழுவதும் வேலை செய்தவர்களுக்கு அவர்களிடம் பேசியபடியே ஒரு தெனாரியம் ஊதியமாகக் கொடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் வேலைக்கு வந்தவர்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்டது. இது மனிதர்கள் பார்வையில் அநியாயம். இறைவனின் பார்வையில் நீதி. இங்கு, வறியோர்க்கு பரிந்து பேசும் நீதிபதியாக தோன்றுகிற இறைவன், தாலந்து உவமையிலே, ‘உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும், இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என்றார். இங்கே இல்லாதவன் எனப் பரிவு காட்டவில்லை. மாறாக, சோம்பேறி எனக் கண்டித்தார். தந்தைக்கே உரிய பாசத்தோடு கண்டிப்பும், நீதியும் வழங்கினார். இவ்வாறு இறைவனின் நீதி மனிதர்களின் நீதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

நமது ஊர்களில், அறுவடைக் காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறுவடைக்குச் செல்வது வழக்கம். தந்தை, மூத்த சகோதரன், இளைய சகோதரன் ஆகிய மூவரும் ஏறக்குறைய விடியும்முன்னே எழுந்து வயலுக்குச் சென்றுவிடுவர். ஆனால் அவ்வீட்டின் தலைவி, அவர்களோடு எழுந்தாலும் எல்லாருக்கும் தேவையான சாப்பாடு செய்து விட்டு, ஏறக்குறைய காலை எட்டு மணிக்குத்தான் வயலுக்குச் செல்வார். அவர் செல்லும்போது தூக்கத்திலிருந்து எழும் செல்லக்குட்டியான கடைசி சகோதரி காலை உணவையும் சாப்பிட்டுவிட்டுத்தான் வயலுக்கு செல்வாள். வயலுக்குப் போன பிறகு கூட அப்பாவிடமும், அண்ணன்களிடமும் அது என்ன, இது என்ன என்று அவ்வப்போது எதாவது கேட்டுக்கொண்டே இருப்பாள். அது அவர்களது வேலைக்கு இடையூறாகத்தான் இருக்கும். இருப்பினும் அவர்கள் வேலை செய்து கொண்டே பதில் சொல்வார்கள். இப்படியாக எல்லாரும் சேர்ந்து மாலை வரை வேலை செய்து விட்டு வீடு திரும்பி மாலையில் உண்ணச்செல்லும் போது, தந்தை அவர்களின் செல்லக்குட்டியான கடைசி மகளைப்பார்த்து, “நீ தாமதமாகத்தான் எழுந்தாய், வயலுக்கு வந்த பிறகு நீ பெரிதாக வேலை எதுவும் செய்யவில்லை எனவே நீ கொஞ்சம்தான் சாப்பிட வேண்டும் ஆனால் நானும், அண்ணன்களும் நாள் முழுவதும் கடினப்பட்டு உழைத்திருக்கிறோம் எனவே நாங்கள் நிறைய சாப்பிட வேண்டும்” என்றா சொல்வார்? இல்லையே. அவ்வீட்டின் செல்லக்குட்டிக்கு சீக்கிரம் பசிக்கும் எனவே அவள் உண்ட பிறகுதான் மற்ற எல்லாரும் சாப்பிட வேண்டும் என்பதுதான் தந்தையின் வாக்காக இருக்கும். இதுதான் தந்தையின் நீதி.

மனிதர்களைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமம். எனவே நீதி என்பதும் எல்லாருக்கும் ஒன்றே. எது நீதி என்பதை அந்தந்த நாட்டில், சமூகத்திலுள்ள சட்டங்கள் முடிவு செய்கின்றன. ஒருவருக்கு உரியதை அவருக்குக் கொடுப்பதே நீதி. சட்டப்படி யார் யாருக்கு எது, எது சேர வேண்டுமோ அதைச் சரியாகக் கொடுப்பதுதான் நீதி. சட்டம் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதுதான். இம்மனித சமுதாயத்தை முறையாக வழிநடத்த மற்றும் வரம்புமீறுகின்றவர்களைக் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனுடைய நோக்கம் மனிதர்கள் தங்களின் சுயநலத்தோடு பிறருடையதை அபகரித்துக் கொள்வதை தடுப்பதற்காகவே இன்று பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இறைவனோ உலகிலுள்ள எல்லா மக்களையும் தன் சொந்த மக்களாகப் பார்க்கிறார். எனவே எல்லாரும் நன்றாக இருக்க வேண்டுமென்பதே அவரது நீதி. தேவையிலிருப்போர்க்கும், வறியோர்க்கும் கொடுத்து அவர்களுக்கு வாழ்வளிப்பதே நீதி. ஆனால் மனித சட்டங்களோ இவற்றை தானம், சேவை என்றழைக்கும்.
ஊதாரி மைந்தனுக்கு சொத்தைப் பிரித்து கொடுத்த தந்தை, அவன் எல்லாம் அழித்து விட்டு வந்தபிறகு அவனுக்கு எதுவுமே கொடுத்திருக்கக் கூடாது. இதுதானே நியாயம். அவன் திரும்பி வந்த போது அவனுக்கு விழா கொண்டாடுவது நம்மைப் பொறுத்தவரை நம் சட்டப்படி அநிநியாயம்தான், அநீதிதான். ஆனால் நொறுங்கிய உள்ளத்தோடு வருகின்ற இளைய மகனிடம் நீதி, நியாயம் பற்றியெல்லாம் தந்தை பேசவில்லை. மாறாக அவனை எதிர்கொண்டு சென்று அரவணைக்கிறார்.

கடந்த ஜீன் மாதம் உரோமைக்கு அருகேயுள்ள காஷியா (Cassia) என்னுமிடத்திலிருக்கும் தூய ரீத்தா பேராலயத்திற்கு ஒப்புரவு அருட்சாதனம் நிறைவேற்ற 15 நாட்கள் சென்றிருந்தேன். என்னோடு சேர்த்து நாங்கள் 5 குருக்கள் இருந்தோம். ஒப்புரவு அருட்சாதனம் நிறைவேற்றுவதுதான் எங்கள் முழுநேரப்பணி. ஒருவாரம் முடிந்ததும், அப்பேராலயத்தின் அதிபர் தந்தையோடு ஒரு கலந்துரையாடல் இருந்தது. அப்போது ஒப்புரவு அருட்சாதனம் நிறைவேற்றுவது குறித்து அவர் எங்களோடு பகிர்ந்து கொண்ட செய்திகள் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அவற்றை, அவர் சொன்னதைப் போலவே கேட்போம்:
ஒப்புரவு அருட்சாதனத்தில் குருக்களாகிய நாம் நீதிபதிகள் இல்லை. நீ செய்தது தவறு என தண்டனைக் கொடுப்பதற்கான பணி அல்ல. நொறுங்கிய உள்ளத்தோடு தந்தையாம் இறைவனின் பரிவிரக்கத்தை எதிர்பார்த்து வரும் மக்களுக்கு அவர்கள் செய்த பாவத்திலும் கூட இறைவன் அவர்களை அரவணைக்கக் காத்திருக்கிறார் என்ற நம்பிக்கையையும், ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.
நாம் அனைவரும் தந்தையாம் இறைவனின் பிள்ளைகள். நம் தந்தையாம் இறைவனிடமிருந்து நீதியைக் காட்டிலும் பரிவிரக்கத்தையே நிறையப் பெற்றிருக்கிறோம். அதே பரிவிரக்கத்தை நாமும் பிறருக்குக் காட்டவேண்டும் அதுதான் உண்மையான நீதி. அப்போதுதான் நாம் தந்தையாம் இறைவனின் பிள்ளைகள். சின்ன காரியமாக இருக்கலாம் அல்லது பெரிய காரியமாக இருக்கலாம், நாமும் நம் வாழ்வின் பலகட்டத்தில் தீர்ப்பு சொல்ல வேண்டிய நிலை வரும்போது கடுமையான நீதிபதியாக அல்லாமல், தந்தையாம் இறைவனைப் போல பரிவிரக்கத்தோடு செயல்படுவோம்.








All the contents on this site are copyrighted ©.