2011-12-13 15:32:50

டிசம்பர் 14, வாழ்ந்தவர் வழியில்... இறையடியார் காத்தரின் டோஹெர்டி (Catherine Doherty)


அமைதி, பிறரன்பு (PAX, CARITAS) என்ற இரு வார்த்தைகள் பொறிக்கப்பட்ட சிலுவையை அணிந்த வண்ணம் பணி புரியும் பல நூறு குருக்களையும் ஏனைய ஆண், பெண் பணியாளர்களையும் கொண்ட ஓர் அமைப்பின் பெயர் Madonna House Apostolate - மடோன்னா இல்லப் பணி. வறுமையில் உள்ளவர்களின் ஒவ்வொரு நாள் தேவைகளை நிறைவு செய்வதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை உருவாக்கியவர் காத்தரின் டோஹெர்டி (Catherine Doherty).
1896ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இரஷ்யாவில் செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் காத்தரின். முதலாம் உலகப் போரின்போது இவர் செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து போர்க்களத்தில் பணிகள் புரிந்தார்.
இரஷ்யப் புரட்சியின்போது இவர் தன் நாட்டிலிருந்து பின்லாந்துக்கு அகதியாக தப்பித்துச் சென்று, அங்கிருந்து இங்கிலாந்து சென்றார். இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையில் பிறந்த இவர், 1919ம் ஆண்டு இங்கிலாந்தில் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தார். 1921ம் ஆண்டு இவரும் இவரது கணவரும் கனடா நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர்.
பிறரன்புப் பணிகள் செய்ய தன்னை இறைவன் அழைக்கிறார் என்பதை உணர்ந்த காத்தரின் 1930களில் 'தோழமை இல்லம்' (Friendship House) என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். இனவெறிச் சூழ்ந்திருந்த வட அமெரிக்காவில் இவரது எண்ணங்கள் மிகவும் புரட்சிகரமாக இருந்தமையால், இவரது பணிகளுக்குப் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தன.
கருத்து வேறுபாடுகள் காரணமாக, இவர் உருவாக்கிய தோழமை இல்லம் என்ற அமைப்பிலிருந்து காத்தரின் விலகி, 1947ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி Madonna House Apostolate - மடோன்னா இல்லப் பணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
வீரச்செயல்களை மதித்து இரஷ்யாவில் வழங்கப்படும் புனித ஜார்ஜ் சிலுவை (Cross of St. George) என்ற விருதும், கனாடவின் மிக உயரிய அரசு விருதான கனடா பதக்கமும் (Order of Canada) இவரது வாழ்நாளில் இவருக்கு வழங்கப்பட்டது.
காத்தரின் டோஹெர்டி 1985ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தன் 90வது வயதில் இறையடி சேர்ந்தார். இறையடியார் (Servant of God) என்று அறிவிக்கப்பட்டுள்ள இவரை ஒரு புனிதராக அறிவிக்கும் முயற்சிகள் கத்தோலிக்கத் திருச்சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.