2011-12-13 15:24:21

ஊழல் நடவடிக்கைகள் சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்கின்றன – ஐ.நா.அறிக்கை


டிச.13,2011. அரசுகளின் பலவீனமான நிர்வாகத்தால் ஏற்படும் ஊழல் நடவடிக்கைகள், சமத்துவமற்ற நிலப்பங்கீட்டிற்கும் வளங்களை மோசமாக நிர்வகிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியி்ட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஒளிவுமறைவில்லாத நிர்வாகம் குறைபடுவதால், அது வளரும் நாடுகளில் சமூகத்தின் உறுதியற்ற தன்மையையும், முதலீட்டையும், வளர்ச்சியையும் பாதிக்கின்றது என்று FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமும், 61க்கு மேற்பட்ட நாடுகளில் செயல்படும் Transparency International என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
நிலங்களைக் கொண்டிருப்பதும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதும், உணவு பாதுகாப்புக்கும், முதலீட்டிற்கும், சமூகத்தின் உறுதித்தன்மைக்கும், உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வேகமாக வளர்ந்து வரும் பனைமர வேளாண்மையால் ஏழைகள் தங்கள் நிலங்களைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
இம்மர வேளாண்மைக்கென குறைந்தது 25 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் தனி நபர்களால் சட்டத்துக்குப் புறம்பே கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.