2011-12-12 14:58:52

கர்தினால் ஜான் பேட்ரிக் ஃபோலி காலமானார்


டிச.12,2011. திருப்பீட சமூகத் தொடர்புத்துறை, மற்றும் எருசலேமின் புனித கல்லறை என்ற அமைப்பு ஆகியவைகளின் முன்னாள் தலைவர் கர்தினால் ஜான் பேட்ரிக் ஃபோலி இஞ்ஞாயிறு காலை அமெரிக்க ஐக்கிய நாட்டில் காலமானார்.
கர்தினாலின் மரணத்தையொட்டி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஃபிலடெல்ஃபியா பேராயர் Charles Chaputக்கு அனுப்பியுள்ள இரங்கற்தந்தியில், திருச்சபைக்கு கர்தினால் ஆற்றியுள்ளச் சேவைகளைப் பாராட்டியுள்ளதுடன் அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்கு தான் செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.
1935ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்ஃபியா உயர்மறைமாவட்டத்தில் பிறந்த கர்தினால் ஃபோலி, 1962ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு அமெரிக்காவில் கத்தோலிக்கச் சமூகத்தொடர்புத் துறையில் பல ஆண்டுகள் தொடர்ந்துச் சேவையாற்றினார். 1984ல் இவரை திருப்பீட சமூகத் தொடர்புத்துறையின் தலைவராக நியமித்து பேராயராக அறிவித்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். 2007ல் புனித கல்லறை என்ற அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட இவரை, அதே ஆண்டு நவம்பர் மாதம் கர்தினாலாகவும் உயர்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாக அறிய வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் தன் சொந்த நாட்டிற்கு திரும்பி ஃபிலடெல்ஃபியாவில் வாழ்ந்து வந்த கர்தினால் ஃபோலி, இஞ்ஞாயிறன்று காலை தன் 76ம் வயதில் காலமானார்.
கர்தினால் ஃபோலியின் இறப்புடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 192 ஆகக்குறைந்துள்ளது. இதில் 109 பேரே திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள்.








All the contents on this site are copyrighted ©.