2011-12-10 14:52:09

இத்தாலிய கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை


டிச.10,2011. தற்போது சமுதாயம் எதிர்நோக்கும் நெருக்கடிகளிலிருந்து வெளிவருதற்கு தனிப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொது நலனை ஊக்குவிப்பதற்கும் இடையே சமத்துவம் ஏற்படுவதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இத்தாலிய கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பின் சுமார் 80 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அந்தச் சமூகத்தின் தேவைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த இத்தாலிய கூட்டமைப்பு, பாப்பிறை 13ம் சிங்கராயர் வெளியிட்ட ரேரும் நோவாரும்–அதாவது புதியன என்ற திருமடலையொட்டி உருவாக்கப்பட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் திருத்தந்தை.
பொருளாதாரத்திலும் நிதி அமைப்பிலும்கூட சரியான நோக்கம், ஒளிவுமறைவின்மை, நல்ல பலன்களைத் தேடுதல் ஆகியவற்றுக்கிடையே தொடர்புகள் உள்ளன, இவை பிரிக்கப்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதார மற்றும் தொழில் உலகிலும் அன்பையும் ஒருமைப்பாட்டையும் வாழ்வதற்கு, இறைவனோடு ஆழமான உறவு கொள்வதும் இறைவார்த்தைக்குத் தொடர்ந்து செவிமடுப்பதும் அவசியம் என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
1891ம் ஆண்டு மே 15ம் தேதி உலக ஆயர்களுக்கென வெளியிடப்பட்ட ரேரும் நோவாரும் திருமடல், முதலீடு மற்றும் தொழிலின் உரிமைகளையும் கடமைகளையும் சுட்டிக் காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.