2011-12-09 15:12:24

புலம் பெயர்ந்தோர் உலகினரின் மனசாட்சிக்குச் சவால் - பேராயர் தொமாசி


டிச.09,2011. புலம் பெயர்ந்தோர் வரலாற்றின் அங்கமாக எப்போதும் இருந்து வரும்வேளை, இவர்களின் எண்ணிக்கையும் இவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களும் அனைத்துலகச் சமுதாயத்தின் சமூகக் கட்டமைப்பில் ஒரு காயமாகவே இன்னும் இருந்து வருகின்றன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் நிலை குறித்த 1951ம் ஆண்டின் ஒப்பந்தம் உருவானதன் 60ம் ஆண்டு நிறைவு, புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்த ஒப்பந்தம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவு ஆகியவற்றையொட்டி நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
ஐ.நா.வின் புலம் பெயர்ந்தோர் அமைப்பு தற்போது பாதுகாத்து, உதவி வரும் சுமார் 3 கோடியே 30 இலட்சம் பேரும் தனித்தனியாக நம் ஒவ்வொருவரது மனசாட்சிக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருகின்றனர் என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
1951ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் பங்குபெற்ற 26 நாடுகளில் திருப்பீடமும் ஒன்று என்பதைப் பெருமையுடன் நினைவுகூரும் இந்நேரத்தில், உலகில் புலம் பெயர்ந்தோருக்குச் செய்யப்பட்டு வரும் நற்பணிகளுக்குத் திருப்பீடம் தனது பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
தண்டனைகள் ஏதுமின்றி மனித உரிமைகள் மீறப்படும் உலகில், எல்லா வகைகளிலும் புலம் பெயர்ந்தோர் உருவாகுவதை ஒருபோதும் நிறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.








All the contents on this site are copyrighted ©.