2011-12-09 15:11:13

திருச்சபை, தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும் - திருத்தந்தை


டிச.09,2011. திருச்சபை, கிறிஸ்தவர்ககெதிரான வெறுப்புணர்வுக்கு அஞ்சுவதைவிட தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருச்சபை தனது வரலாறு முழுவதும் அடக்குமுறைகளால் துன்புற்று வருகின்ற போதிலும் அது எப்பொழுதும் இறைவனின் ஒளியாலும் பலத்தாலும் ஆதரவடைந்து வருகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
“மரியா, அமல உற்பவி” என்ற விசுவாச சத்தியம், 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி திருத்தந்தை 9ம் பத்திநாதரால் பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் விதமாக உரோம் இஸ்பானியப் படிகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ள அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக இவ்வியாழன் மாலை கூடியிருந்த விசுவாசிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
திருச்சபை எதிர்கொள்ளும் ஒரே ஆபத்து அதன் உறுப்பினர்கள் செய்யும் பாவம் என்றும் திருச்சபை தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அன்னைமரியா, பாவக்கறையின்றி இருந்தார், திருச்சபையும் தூயது, ஆயினும் அது நம் பாவங்களால் குறிக்கப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இதனாலே கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் போது, அன்னைமரியாவின் உதவியை நாடுகின்றனர் என்றும் கூறினார்.
நமக்கு உண்மையிலே தேவைப்படும், குறிப்பாக மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் இத்தாலி, ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் நம்பிக்கையை அன்னைமரியா கொடுக்கிறார் என்று திருத்தந்தை மேலும் கூறினார்.
“பெண், கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார், நிலா அவருடைய காலடியில் இருந்தது, அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” என்ற திருவெளிப்பாட்டு வசனங்களை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, இந்தப் பெண் மரியாவே என்றும், இவர் முழுமையும் இறைவனின் ஒளியால் சூழப்பட்டு இறைவனில் வாழ்ந்தார் என்றும் அவர் கூறினார்.
அமலமரி விழாவாகிய இவ்வியாழனன்று அன்னைமரியாவிடம் செபித்து அவருக்கு வெள்ளைநிற ரோஜா மலர்களையும் அர்ப்பணித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.