2011-12-07 16:02:04

மதச் சிறுபான்மை குழுக்கள் மீது காட்டப்படும் வன்முறைகளைத் தடை செய்வதே இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஆதரவைப் பெறும்


டிச.07,2011. இணையதளத்தின் மூலம் வெறுப்பை வளர்க்கும் செய்திகளையும் கருத்துக்களையும் தடை செய்வதற்கு இந்திய அரசு அறிவித்துள்ள கருத்துக்கள் தேவைதான் என்றாலும், இந்தியாவில் மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க இது மட்டும் போதாது என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை சார்ல்ஸ் இருதயம் கூறினார்.
இணையதளத்தில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் Facebook, Google, Skype, Yahoo போன்ற வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் அங்கு பரிமாறப்படும் செய்திகளை மேற்பார்வையிடும் வழிகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இச்செவ்வாயன்று பேசியதையொட்டி தன் கருத்துக்களைக் கூறிய அருள்தந்தை சார்ல்ஸ் இருதயம் இவ்வாறு கூறினார்.
பல அடிப்படைவாதக் குழுக்கள் இணைதளத்தின் மூலம் வெறுப்பை வளர்க்கும் செய்திகளைப் பகிர்ந்து வருவது ஆபத்தை உருவாக்கும் ஒரு போக்கு என்பதால் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை சார்ல்ஸ் இருதயம், மதச் சிறுபான்மை குழுக்கள் மீது காட்டப்படும் வன்முறைகளைத் தடை செய்யும்படி பாராளு மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை மத்திய அரசு விரைவில் சட்டமாக்குவதே கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஆதரவைப் பெற்ற ஒரு செயல்பாடு என்று வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.