2011-12-07 16:02:43

சுற்றுச் சூழலைச் சீரமைப்பதில் 'முடியாது' என்ற வார்த்தையை உலகம் இனி ஏற்றுக் கொள்ளாது - ஐ.நா. பொதுச் செயலர்


டிச.07,2011. உறுதியான மனதுடன் இவ்வுலகின் சுற்றுச் சூழலைச் சீரமைக்கும் முடிவுகளை நாம் எடுக்கத் துணிய வேண்டும், ஏனெனில் 'முடியாது' என்ற வார்த்தையை உலகம் இனி நம்மிடம் இருந்து ஏற்றுக் கொள்ளாது என்று ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
நவம்பர் 28 முதல் டிசம்பர் 9 இவ்வெள்ளிவரை தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த உலக உச்சி மாநாடு, முடிவுகள் எடுக்கும் நிலையில், இச்செவ்வாயன்று தன் அமர்வைத் துவங்கியபோது, ஐ.நா. பொதுச் செயலர் இந்த அழைப்பை விடுத்தார்.
கடந்த ஆண்டு Cancunல் நடைபெற்ற கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் வழிகளில் தற்போதைய முடிவுகள் அமையவேண்டும் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென நாடுகள் இணைந்து வாக்கு தந்துள்ள 30 பில்லியன் டாலர்கள் நிதியை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதில் அடுத்த சில ஆண்டுகள் வெளிப்படையான முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் பான் கி மூன் வலியுறுத்தினார்.
பல பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை விரைவில் தான் சந்திக்க விருப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத சக்திகளை இந்நிறுவனங்கள் பயன்படுத்துமாறு இத்தலைவர்களிடம் தான் வலியுறுத்திக் கூற விருப்பதாகவும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.