2011-12-07 16:01:25

ஐரோப்பாவின் OSCE அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி வழங்கிய உரை


டிச.07,2011. கலாச்சார உரையாடல்கள் மற்றும் அமைதி முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதை திருப்பீடம் நன்றியுடன் நினைத்து வாழ்த்துகிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்ளும் OSCE (Organization for Security and Co-operation in Europe) என்ற அமைப்பின் 18வது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலரான பேராயர் தொமினிக் மம்பெர்த்தி இவ்வாறு கூறினார்.
நாடுகளுக்கிடையில் சிறு இராணுவத் தளவாடங்கள் சட்டத்திற்குப் புறம்பாக கடத்தப்படுவதைத் தடுக்க ஐரோப்பாவின் OSCE அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது திருப்பீடத்திற்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று பேராயர் மம்பெர்த்தி தன் உரையின் துவக்கத்திலேயே கூறினார்.
அரசியல் போராட்டங்கள், பொருளாதாரப் பின்னடைவுகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகிய பல காரணங்களால் நாடு விட்டு நாடு புலம் பெயரும் மக்கள் தொகை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் வேளையில், ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் மாறுதல்கள் தேவையாக உள்ளன என்று பேராயர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டுகளில் OSCE அமைப்பு மனித உரிமைகள் பற்றிய பல தெளிவுகளை தன் கொள்கைகளில் வெளிப்படுத்தியிருப்பது நிறைவைத் தருகிறதென்று கூறிய பேராயர் மம்பெர்த்தி, அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான மத உரிமையை பல நாடுகள் பறித்து வருவதையும் இந்த அமைப்பு கண்காணித்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
2011ம் ஆண்டு திருத்தந்தை உலக அமைதி நாளுக்கென விடுத்த செய்தியில் உலகெங்கும் மதத்திற்காக அதிக இன்னல்களைத் தாங்குவது கிறிஸ்தவர்களே என்று கூறியதை நினைவுறுத்திய பேராயர் மம்பெர்த்தி, உலகின் பல நாடுகளில் அரசு மற்றும் அடிப்படைவாதக் கொள்கைகளால் துன்புறும் கிறிஸ்தவர்கள் குறித்து இவ்வமைப்பு உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பெண்களும், சிறுவர், சிறுமியரும் நாடு விட்டு நாடு விற்பனை செய்யப்படும் கொடுமையையும் தன் உரையில் எடுத்துக் கூறிய திருப்பீட அதிகாரி, இந்த விற்பனையை அடியோடு ஒழிக்க ஐரோப்பிய நாடுகள் சட்ட ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.