2011-12-07 16:01:51

ACN எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு பாப்பிறை அறக்கட்டளையாக அங்கீகாரம்


டிச.07,2011. Aid to the Church in Need (ACN) என்று அழைக்கப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பினை ஒரு பாப்பிறை அறக்கட்டளையாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்கீகரித்துள்ளார்.
திருப்பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenzaவை இந்த அறக்கட்டளையின் தலைவராக திருத்தந்தை நியமித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் திக்கற்று வாழ்ந்த 1 கோடியே, 40 இலட்சம் அகதிகளுக்கு உதவிகள் செய்வதற்கு திருத்தந்தை 12ம் பத்திநாதர் விடுத்த அழைப்பினை ஏற்று Werenfried van Straaten என்ற குருவின் தலைமையில் உருவாக்கப்பட்டது ACN என்ற இந்த அமைப்பு.
ஜெர்மனியின் Frankfurt நகருக்கு அருகே Königstein எனுமிடத்தில் தன் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் ACN அமைப்பு, உலகின் 17 நாடுகளில் கிளை அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும், இவ்வமைப்பின் வழியாக உதவிகள் செய்வோரின் எண்ணிக்கை 6 இலட்சம் என்றும், இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் 140 நாடுகளில் 5000க்கும் அதிகமான பிரரன்புப் பணிகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் 570 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை வழங்கி வருகின்றனர் என்றும் கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.