2011-12-06 15:16:04

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 97


RealAudioMP3 ஒரு நாள் அரசர் ஒருவர் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, அவற்றில் ஒன்றினுள் விலையுயர்ந்த வைரக் கற்களை பதுக்கி வைத்தார். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளரிடம் கொடுத்து, “தகுதியுள்ள, கண்ணியமான மனிதன் ஒருவருக்கு இந்த கனமான ரொட்டியை, அதாவது வைரம் அடங்கிய ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை, ஒரு சாதாரணப் பிச்சைக்காரருக்குக் கொடு,'' என்று சொன்னார்.
அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளர், வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தார். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரருக்கு அளித்தார். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர், தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தார். இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி, தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரரை அழைத்து, ''நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,'' என்றார். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னர், ''ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால், வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது' என்று நினைத்தார். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரரையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டார். அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னருக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று, பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு, சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தார்.
தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரர், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும், அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டார். மகிழ்ச்சியில் துள்ளிய அவர் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரர், ''இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார். இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,'' என்று கூறினார். அந்தப் பிச்சைக்காரரின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னர், அவரை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவருக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினார்.

அன்பார்ந்தவர்களே! இன்று நாம் சிந்திப்பது திருப்பாடல் 97. யாவே இறைவன் நீதியும், நேர்மையும் உள்ளவர். இவ்வுலகை நீதியோடு ஆட்சி செய்கிறார். அவரது நீதியை இவ்வுலகு அறிவிக்கிறது. நீதியின் ஆண்டவரை மக்கள் போற்றி, புகழ்ந்து மகிழ்கின்றனர். தீமையை வெறுத்து நேர்மையாக வாழ்கின்றவர்களை, பொல்லாரின் கைகளிலிருந்து விடுவிக்கிறார். நேர்மையாளர்களை இறைவன் ஒரு போதும் கைவிடுவதில்லை. எனவே நேர்மையானவர்களே! மகிழ்ந்திருங்கள் என்பதுதான் இத்திருப்பாடலின் சுருக்கம்.
மக்கபேயர் காலத்தில்தான் இத்திருப்பாடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பழைய ஏற்பாட்டிலுள்ள வேறு எந்தப் புத்தகத்திலும் சொல்லப்படாத நீதிமான்களின் உயிர்ப்பு, இறந்தோருக்கான வேண்டுதல், மண்ணுலக மனிதர்களுக்கான விண்ணுலக புனிதர்களின் மன்றாட்டு என்பவை மக்கபேயரின் இரண்டாம் புக்கத்தில்தான் இடம்பெறுகின்றன.
மக்கபேயர் காலத்தைப் பொறுத்தவரை திருச்சட்டத்தைத் துல்லியமாகக் கடைபிடிப்போர் நேர்மையாளர்கள் என்று கருதப்பட்டனர். சோதனைகள் வரும். இருப்பினும் இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கொடுக்கின்ற புத்தகம். இதற்கு சிறந்த உதாரணம் நம் எல்லாருக்குமே நன்கு தெரிந்த மக்கபேயர் இரண்டாவது புத்தகம் 7ம் பிரிவில் இடம்பெறுகின்ற, திருச்சட்டத்திற்காக உயிரைக் கொடுத்த தாயும், ஏழு புதல்வர்களும். திருச்சட்டத்தை மீறி, பன்றி இறைச்சியை உண்ணவும், பிற தெய்வங்களை வணங்கவும், அந்தியோக்கு அரசன் ஆணை பிறப்பித்தான். அரசனின் ஆணைக்குச் சம்மதிக்க மறுத்ததால் சித்திரவதை செய்யப்பட்டு, ஏழு மகன்களும் இறுதியில் அவர்களது தாயும் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் படித்திருக்கிறோம். எதிர்வருகின்ற இன்னல்கள், இக்கட்டுகளுக்குத் தலைவணங்காமல் திருச்சட்டத்தை முழுவதுமாக கடைபிடிப்பவர்கள்தான் நேர்மையாளர்கள். இந்த நேர்மையாளர்களுக்கு இறைவன் கைம்மாறு அளிப்பார் என்பதே மக்கபேயர் இரண்டாவது புத்தகம் நமக்குச் சொல்கிறது.

திருப்பாடல் 97: 10,11,12
தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.

ஆனால் இன்று நேர்மை என்றால் என்ன? யார் நேர்மையாளர்கள்? இன்றைய நேர்மையை சிறு உதாரணத்தோடு விளக்க முயல்கிறேன். எனக்கு நன்கு பழக்கமான இளைஞன் ஒருவர், இளங்கலை கணிதம் படித்து, பிறகு ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து கொண்டே, தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை கணிதம் படித்தார். நன்கு படிக்கக் கூடியவர். ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. முதுகலை முதல் ஆண்டுத்தேர்விலே முதன்முறையாக ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. நன்கு படித்தேன், நன்கு எழுதினேன். ஆனால் முடிவு இப்படி இருக்கிறது என்று வேதனைப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், மேலும் நன்கு படித்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறாத பாடத்தை எழுதினார். மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. அதிர்ச்சி அடைந்தார். மனம் உடைந்து போனார். ஆனால் நண்பர்கள் அவரைத் தேற்றினர். தொலைதூரக்கல்வியிலே இதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழ் வாங்கிவிடலாம் என்று சொன்னார்கள். அந்த மாணவருடைய பெற்றோரும் பணத்தைக் கட்டித் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழைப் பெற்றுவிட்டனர்.

அன்பார்ந்தவர்களே! இதுதான் இன்றைய நேர்மை. உண்மைக்கே காலம் இல்லை, உண்மையா இருந்தா, இந்த உலகத்துல வாழமுடியாது. நல்லவனுக்கு நல்லவனாக இருக்கணும், ஏமாற்றுப்பேர்வழிகளை, அவர்கள் வழியிலேயே சென்று ஏமாற்ற வேண்டும். இப்படி வாழ்பவர்களைத்தான் இந்த உலகமும் புத்திசாலி என்று ஏற்றுக் கொள்கிறது, பாராட்டுகிறது. இன்று தொலைதூரக் கல்வி பயில்வோர் தேர்வு மையங்களிலே புத்தகம் வைத்து, பார்த்து எழுதுவது சகஜமாகிவிட்டது. “யார் தான் இன்னிக்கு லஞ்சம் வாங்கல” என்று லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. இன்று கணிணி உலகில் புதிதாக வரும் மென்பொருள்களை (Software) முறையாக காசு கொடுத்து வாங்காமல் முறையில்லாமல் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவிட்டு “நான் எந்த மென்பொருளையுமே (Software) காசு கொடுத்து வாங்குவதில்லை” எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதும் தான் இன்றைய நேர்மையின் மறுபக்கங்கள். இவ்வாறு தவறுகள் நியாயப்படுத்தப்பட்டு, அது சரிதான், நியாயம்தான், நேர்மைதான் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் மிகவும் வருத்தத்துக்குரியது.

இதைப்பற்றிப் பேசுகின்ற போது எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது. “இதெல்லாம் பேச நல்லாயிருக்கும், ஆனா வாழ்க்கையில நடக்குமா” என்ற ஒரு நெருடல்தான். ஏன் இந்த நெருடல்? “இந்த உலகத்துல இப்படித்தான் வாழணும், இல்லன்னா வாழ முடியாது” என்று நம் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. இதையும் தாண்டி, இதையெல்லாம் தீமை என்று யார் சொன்னது? என்ற கேள்வி கேட்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறோம்? ஏனெனில், நாம் நீண்ட கால பயன்களையும், விளைவுகளையும் யோசிப்பதில்லை. யோசிக்கவும் விரும்புவதில்லை. அதற்கு நேரமுமில்லை. ஏனெனில், எல்லாமே அவசரம் தான். இந்த அவசர உலகத்தில் அப்பப்ப, அதுஅது, நடந்தா போதும். இப்போதைக்கு நாம் விரும்புவதை அடைய நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “நம்ம மட்டும் நேர்மையா இருந்து, என்ன செஞ்சுட போறோம்? நாமாக நேர்மை தவறவில்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். எனவே, ஊரோடு ஒத்துப்போ” என்பதைப்போல வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட கால ஓட்டத்தில் நாமே நினைத்தாலும் நம்மால் நேர்மையாக வாழமுடியாது. ஏனெனில் நமது சிந்தனைகளும், செயல்களும் நேர்மை என்பதற்கு பதிலாக மாற்றுக்கருத்தாக்கத்தை நம்மிலே ஏற்படுத்திவிடும். நீண்டகாலத்திற்கு பிறகு, ‘வாய்மை வெல்லும்’, ‘நேர்மையாளர்களை இறைவன் கைவிடமாட்டார்’ என்பதெல்லாம் நமது மனதை விட்டு மட்டுமல்ல மாறாக நாம் வாழும் சமூகத்திலிருந்தே வெளியேறி இருக்கும்.

எலிசெபத் பிக்யர் (Elizabeth Bichier) என்பவர் செல்வந்தராகப் பிறந்தாலும், செல்வங்களைத் துறந்து துறவியானார். இவர் சிலுவையின் புதல்வியர் சபையைத் தோற்றுவித்தவர். இவர் ஒரு நாள் வழியில் சென்று கொண்டிருக்கும் போது, நோயால் துன்பப்பட்ட ஒருவரைத் துறவகத்திற்கு கொண்டு வந்து, அவர் இறக்கும் வரை பராமரித்து வந்தார். அவர் இறந்த அடுத்தநாள், காவல்துறை அதிகாரிகள் வந்து எலிசெபத் பிக்யரை கைது செய்தனர். ஏனெனில் வழியில் நோயால் துன்பப்பட்ட மனிதன் ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படிக் குற்றம் என்பதால் அவரைக் கைது செய்தனர். அப்போது உடனிருந்த சகோதரர்கள், “நான் அவரைக் கொண்டு வரவில்லை, அவராகவே வந்தார். அவர் குற்றவாளி என எங்களுக்குத் தெரியாது” என்று மாற்றிச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் எலிசெபத்தோ, “நான் தான் அவர் நோய்வாய்ப்பட்டு வழியில் கிடப்பதைப் பார்த்து இல்லத்திற்கு அழைத்து வந்தேன். அவர் குற்றவாளி என்பது எனக்குத் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், அவருக்கு மருந்து கொடுத்திருப்பேன்” என்று சொன்னாராம். அவரது உண்மை மற்றும் நேர்மையை அறிந்து கொண்ட காவல்துறை அதிகாரி அவரை விடுவித்ததோடு அவருடைய நேர்மையைக் கண்டு அவரைப் பாராட்டினாராம். எலிசெபத் பிக்யர் இன்று கத்தோலிக்கத் திருச்சபையில் நேர்மைக்கு பெயர்போன புனிதராகத் திகழ்கின்றார். நேர்மையாளர்களை இறைவன் ஒரு போதுமே கைவிடுவதில்லை என்பதற்கு இவரே சிறந்த ஓர் உதாரணம்.








All the contents on this site are copyrighted ©.