2011-12-06 15:28:19

பணத்தின்மீது அதிகக் கவனம் செலுத்துவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு இட்டுச் செல்கின்றது என்கிறார் கர்தினால் Maradiaga


டிச.06,2011. பணத்தின் மீது அதிகக் கவனம் செலுத்துவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் மக்கள் மனிதாபிமானமற்றவர்களாக மாறுவதற்கும் காரணமாக இருப்பதாக அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி வரை தென் ஆப்ரிக்காவில் இடம்பெறும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கிற்கு 20பேர் அடங்கிய காரித்தாஸ் பிரதிநிதிகள் குழு ஒன்றை வழிநடத்திச்சென்றுள்ள கர்தினால் Maradiaga பேசுகையில், பணத்தை மட்டும் தேடுவதால் தன் உண்மை நிலைகளை இழந்து நிற்கும் மனித குலத்தை மீண்டும் மனிதாபிமானமுடையதாக மாற்றுவது மதக்குழுக்களின் கடமையாகிறது என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Copenhagenல் இடம்பெற்ற தட்பவெப்ப நிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், பொருளாதார பிரச்சனைகள் குறித்து மட்டும் விவாதித்ததே தவிர, சுற்றுச்சூழல் குறித்து தன் கவனத்தைத் திருப்பவில்லை என்றுரைத்த கர்தினால் Maradiaga, பணத்தை மட்டுமே தேடி வரும் மக்களின் போக்கு, சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றது என்றார்.
தட்பவெப்ப நிலை மாற்றம் தொடர்புடைய பிரச்சனை, சுற்றுச்சூழல் அக்கறைக்கு அழைப்பு விடுப்பது மட்டுமல்ல, ஒழுக்க ரீதியோடும் தொடர்புடையது என இக்கருத்தரங்கில் பங்குபெற்ற அனைத்து மதப்பிரதிநிதிகளும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.