2011-12-06 15:26:32

குடியேற்றம் என்பது எப்போதும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டும் இடம்பெறுவதில்லை என்பதை வளர்ந்த நாடுகள் உணரவேண்டும் - பேராயர் தொமாசி


டிச.06,2011. IOM எனும் அனைத்துலகக் குடியேற்றதாரர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் குடியேற்றதாரர் குறித்தப்பிரச்சனை இன்னும் உலக அக்கறைக்கான அவசர அழைப்பை விடுப்பதாகவே உள்ளது என்றார் பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி, அனைத்துலகக் குடியேற்றதாரர் அமைப்பின் 100வது அவைக்கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றியபோது, இன்றைய உலகின் பொருளாதார நெருக்கடிகள் குடியேற்றாதாரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட அவர்களின் வாழ்வை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.
இன்றைய உலகில் குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை 21 கோடியே 40 இலட்சமாக இருப்பது மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகி வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.
இயற்கை பேரிடர்கள் மற்றும் மனித வன்முறைகளால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும் மக்களையும் மனதில் கொண்டு நேர்மையான தீர்வுகளைக் காண மனித குலம் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் தொமாசி, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டத் தீர்வுகள் ஒத்துழைப்பின்றி தனிப்பட்டு நிற்கின்றன என்பதை எடுத்துரைத்தார்.
குடியேற்றதாரர்கள் அவர்கள் குடியேறும் நாட்டிற்கு தங்கள் பங்கை வழங்குபவர்களாக நோக்கப்பட வேண்டுமேயொழிய, சுமையாக நோக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற பேராயர், குடியேற்றம் என்பது எப்போதும் பொருளாதார காரணங்களுக்கு மட்டும் இடம்பெறுவதில்லை எனவும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.