2011-12-05 15:06:11

டிசம்பர் 06 வாழ்ந்தவர் வழியில்…….புனித நிக்கோலாஸ்


நிக்கோலாஸ், பட்டாரா எனும் அக்காலத்திய கிரேக்க நகரத்தில் 270ம் ஆண்டில் பிறந்தார். பணக்காரக் கிறிஸ்தவக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்த இவர், இளம் வயதிலே பெற்றோரைக் கொள்ளை நோயில் இழந்தார். எனவே இவர் தனது மாமாவான பட்டாரா ஆயர் நிக்கோலாஸ் என்பவரால் வளர்க்கப்பட்டார். (இவருக்கு இவரது மாமாவின் பெயரே சூட்டப்பட்டது) பின்னர் நிக்கோலாஸ் குருவாகி, Myra நகரின் ஆயரும் ஆனார். Myra நகரமானது தற்போதைய துருக்கியின் Demre ஆகும். ஆயர் நிக்கோலாஸ், பல ஏழைகளுக்கு மறைவாக உதவிகள் செய்திருக்கிறார். இறந்தோருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு சமயம் அந்நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. குரூரப் புத்தி கொண்ட ஒருவன், ஒரு வீட்டின் மூன்று சிறுவர்களையும் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி உப்புக்கண்டம் போடுவதற்காக அவற்றை ஒரு பீப்பாயில் வைத்திருந்தான். அந்நேரம் அப்பகுதியில் பசியால் வாடுவோரைப் பார்வையிட வந்த ஆயர் நிக்கோலாஸ், இந்தக் கொடூரனின் செயலைப் பார்த்து அச்சிறுவர்களைத் தனது செபத்தின் மூலம் உயிர் பெறச் செய்தார். அதேபோல் ஓர் ஏழை, வரதட்சணை பிரச்சனையால் தனது மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுக்காமலே வைத்திருந்தார். இதனால் அவர்கள் விபச்சாரிகளாக மாறும் ஆபத்தும் இருந்தது. இந்த ஏழையின் நிலையை அறிந்து அவ்வீட்டாருக்குத் தெரியாமலே அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார் ஆயர் நிக்கோலாஸ். இதனால் அவர் மூன்று பைகள் நிறையத் தங்கக் காசுகளை நிரப்பி இரவில் அவ்வீட்டுச் சன்னல் வழியாகப் போட்டார். இவ்வாறு ஆயர் நிக்கோலாஸ் செய்த பிறரன்புச் செயல்கள் பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஆயர் நிக்கோலாஸ், 343ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். "மக்களின் வெற்றி" எனப் பொருள்படும் புனித நிக்கோலாசின் பரிந்துரையால் பல புதுமைகள் நடந்ததால் இவர், புதுமைகள் செய்யும் Nikolaos எனவும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை இப்பெயரை "புனித நிக்கோலாய், புதுமைகள் படைப்பவர்" எனவும் அழைத்தது. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எடுத்துக்காட்டாகவும் இவர் திகழ்கிறார். இவரின் திருப்பண்டம், 1087ம் ஆண்டில் Myra விலிருந்து தென்கிழக்கு இத்தாலிய நகரமான பாரிக்கு எடுத்துவரப்பட்டது. Myra வில் இவரது திருப்பண்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி தெளிவான திரவ நிலைக்கு வந்து பன்னீர் போன்ற மணம் பரப்பியதாகவும் பாரியிலும் இவ்வாறு நிகழ்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நீருக்கு அற்புத சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. கத்தோலிக்கர், ஆங்லிக்கன், லூத்தரன், ஆர்த்தடாக்ஸ் என எல்லாக் கிறிஸ்தவர்களாலும் போற்றப்படுபவர் புனித நிக்கோலாஸ். இவர் கிரீஸ், பெல்ஜியம், பிரான்ஸ், ரொமானியா, பல்கேரியா, ஜார்ஜியா, அல்பேனியா, இரஷ்யா, மாசிடோனியா, சுலோவாக்கியா, செர்பியா, மொந்தெநெக்ரோ ஆகிய நாடுகளில் கப்பலில் வேலை செய்வோர், வணிகர்கள், வில்லாளர்கள், திருடர்கள், சிறார், மாணவர் ஆகியோருக்குப் பாதுகாவலர். பாரி, ஃப்ரைபூர்க், லிவர்ஃபூல், சாசரி, ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களின் பாதுகாவலர் புனித நிக்கோலாஸ்.








All the contents on this site are copyrighted ©.