2011-12-03 15:30:10

அன்னை தெரேசாவைப் போல் ஏழைகளிடையே பணீயாற்றுவதற்குரிய வ்ல்லமை ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது


டிச.03,2011. அன்னை தெரேசாவைப் போல் ஏழைகளிடையே பணியாற்றுவதற்குரிய வல்லமை ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது, அதனை அடையாளம் கண்டு வாழ்க்கையை மாற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் புத்த மதத்தலைவர் தலாய் லாமா.
அன்னை தெரேசா குறித்து கொல்கத்தாவில் அண்மையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமா, நீடித்த மகிழ்வு என்பது பிறருக்கானச் சேவை வழியாகவே கிட்டுகின்றது என்றார்.
நம் இதயங்களிலிருந்து எதிர் மறை எண்ணங்களைக் களைந்து, அங்கு பொய்மைக்கும், எமாற்று வேலைகளுக்கும் எந்த இடமும் வழங்காமல் இருப்பதன் வழி மற்றவருக்கான அக்கறையையும் இளகிய இதயத்தையும் நாம் பெறமுடியும் என்றார் புத்தமதத் தலைவர்.
இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் தன் உரையின் போது பாராட்டிய தலாய் லாமா, தான் அன்னை தெரேசாவின் பல்வேறு சபை இல்லங்களைப் பார்வையிட்டுள்ளதாகவும், அவர்களின் சேவையால் மிகப்பெரிய அளவில் கவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்னை தெரேசா பற்றி இடம்பெற்ற கூட்டத்தில் பிறரன்பு சகோதரிகள் சபையின் தலைவி பிரேமாவும் கலந்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.