2011-12-02 15:24:21

டிச 03, 2011. வாழ்ந்தவர் வழியில் .... இராசேந்திர பிரசாத்


இந்தியாவில் இருமுறை குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் யார் எனக்கேட்டால் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் முதல் குடியரசுத்தலைவர் யார் என்று கேட்டால் 'இராசேந்திர பிரசாத்' என பலர் பதில் கூறிவிடுவர். இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார் இராசேந்திர பிரசாத். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் செயலாற்றியுள்ளார். பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். மிகப் பிரபல வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார். 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார். 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாக பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1962ம் ஆண்டு வரை
பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.