2011-12-02 15:29:11

கர்நாடக அரசு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளை 'வாபஸ்' பெறுவதாக அறிவித்துள்ளது


டிச.02,2011. 2008ம் ஆண்டு கர்நாடக அரசு 338 குற்றமற்ற கிறிஸ்தவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளை 'வாபஸ்' பெறுவதாக அறிவித்துள்ளதென்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் இணையதள செய்தி கூறியுள்ளது.
Daijiworld ஊடக வலை என்ற இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியின் அடிப்படையில், CBCI வலைத்தளம் இவ்வியாழனன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
IFKCA எனப்படும் கர்நாடகா கிறிஸ்தவர்களின் அகில உலக அமைப்பு, மற்றும் பொது நிலையினர், குருக்கள் என பல்வேறு குழுக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்று இந்தச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கர்நாடக மாநில அரசின் சட்டத் துறை அமைச்சர் சுரேஷ் குமார் அரசின் இந்த முடிவை செய்தியாளர்களுக்கு அறிவித்தபோது, IFKCA மற்றும் சில குழுக்களின் தொடர் முயற்சியால் இது நடைபெற்றது என்பதைச் சுட்டிக் காட்டினார் என்று சொல்லப்பட்டுள்ளது.
வழக்குகளை வாபஸ் பெறுவது என்று கர்நாடக அரசு ஏற்கனவே தீர்மானித்திருந்தாலும், மாநிலச் சட்டசபையில் முறையாக அது விவாதிக்கப்பட்டு, இவ்வியாழனன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டதென்றும், இந்த முடிவால் குற்றமற்ற இளையோர் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
அரசின் இந்த முடிவுக்கு IFKCA சார்பில் நன்றியை தெரிவித்த இவ்வமைப்பின் தலைவர் Ronald Colaco, கர்நாடக அரசு தொடர்ந்து கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.