2011-12-02 15:31:03

ஊழல்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 95வது இடம்


டிச.02,2011. சர்வதேச அளவில், ஊழல் தொடர்பாக கணிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 95வது இடத்திலும், சீனா 75வது இடத்திலும், பாகிஸ்தான் 134வது இடத்திலும் உள்ளன.
ஊழலுக்கு எதிராக உலக அளவில் போராடி வரும் Transparency International என்ற சர்வதேச அமைப்பு, ஊழல்கள் குறித்த கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது. இவ்வியாழனன்று வெளியான அந்த முடிவுகளின் படி, சர்வதேச அளவில் ஊழல் குறைந்த நாடாக நியூசிலாந்து உள்ளதென தெரியவந்துள்ளது.
ஊழல்குறைந்த நாடுகளின் பட்டியலில், முறையே டென்மார்க், பின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. கடந்தாண்டு வெளியான ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, தற்போது 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
183 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ஊழலை மக்கள் கண்ணோக்கும் குறியீடான corruption perceptions index மதிப்பெண்கள் முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலிடததில் உள்ள நியூசிலாந்து 9.5 மதிப்பெண்களை பெற்றுள்ளது. பட்டியலின் இறுதியில் உள்ள சோமாலியா நாடு 1 மதிப்பெண்ணை பெற்றுள்ளது.
இந்தியா, 3.1 corruption perceptions index மதிப்பெண்களுடன் 95வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 183 நாடுகளில், மூ்னறில் இரண்டு பங்கு நாடுகள் 5 விழுக்காட்டிற்குக் குறைவான corruption perceptions index மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.








All the contents on this site are copyrighted ©.