2011-12-02 15:28:43

உலக எய்ட்ஸ் நாளையொட்டி, வத்திக்கான் அதிகாரி வெளியிட்ட செய்தி


டிச.02,2011. உலக எய்ட்ஸ் நாள் கடைபிடிக்கப்படும்போது, உலகெங்கும் இந்த நோய் கண்டவர்களுக்குத் தகுந்த பராமரிப்பு கிடைத்தல், பாலின உறவுகளில் சரியான பாடங்கள், மற்றும் கருவுற்றிருக்கும் தாயிலிருந்து குழந்தைக்கு இந்த நோய் பரவாமல் இருக்கத் தேவையான ஆய்வுகள் ஆகியவற்றில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் நாளையொட்டி, நல பராமரிப்புப் பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தியில், எய்ட்ஸ் நோயைப் பற்றிய தவறான எண்ணங்களை மக்களிடமிருந்து அகற்ற இன்னும் தீவிர முயற்சிகள் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த நோயை தடுக்கவும், குணமாக்கவும் பல்வேறு முயற்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் ஒவ்வோர் ஆண்டும் உலகில் 18 இலட்சம் பேர் இந்த நோயினால் மடிகின்றனர் என்று பேராயர் Zimowski தன் செய்தியில் சுட்டிக் காட்டினார்.
இருபால் உறவுகளைப் பற்றிய எண்ணங்களில் மனிதர்கள் இன்னும் தெளிவு பெறவேண்டும் என்று வலியுறுத்திய பேராயர், திருச்சபையின் படிப்பினைகளில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கட்டுப்பாடுள்ள இருபால் உறவே இந்த நோய்க்குத் தலை சிறந்த தீர்வு என்பதையும் வலியுறுத்தினார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருடனும், இந்நோய் கண்டோருக்கு உதவிகள் செய்யும் நலப் பணியார்களுடனும் திருச்சபை மனதாலும், செபங்களாலும் இணைந்துள்ளது என்று பேராயர் Zimowski தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.