2011-12-01 15:36:14

பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டில் பேராயர் வேலியோவின் உரை


டிச.01,2011. நாடு விட்டு நாடு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் வேளையில், பல்வேறு நாடுகளில் பயிலும் பல்கலைக் கழக மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பை திருச்சபை வெகுவாக உணர்ந்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதன் முதல் சனிக்கிழமை வரை வத்திக்கானில் நடைபெற்று வரும் பன்னாட்டு மாணவர்களின் வழிநடத்துதல் பற்றிய மூன்றாவது உலக மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய புலம் பெயர்ந்தோர் மற்றும் வழிப்போக்கர்களின் திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò, மாணவர்கள் மீது திருச்சபை காட்டி வரும் அக்கறையை எடுத்துரைத்தார்.
நாடு விட்டு நாடு சென்று பயிலும் மாணவகளை வழிநடத்தும் அக்கறை திருத்தந்தை 12ம் பத்திநாதர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டி பேசிய பேராயர் வேலியோ, தொடர்ந்து வந்த திருத்தந்தையர்கள் இந்த வழிநடத்துதல் பணியை எவ்விதம் உறுதிப்படுத்தினர் என்பதையும் எடுத்துக் கூறினார்.
நாளுக்கு நாள் பெருகிவரும் கலாச்சாரங்களின் சங்கமத்தைக் கையாளும் வழிகள் பெரும் சவாலாக மாறிவரும் வேளையில் திருச்சபையும் இந்தச் சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறிய வார்த்தைகளை தன் உரையில் நினைவுறுத்திய பேராயர் வேலியோ, தற்போது துவங்கியுள்ள மூன்றாவது உலக மாநாடு இந்தச் சவாலைச் சந்திக்கும் வழிகளை ஆராயும் என்பதில் தனக்குள்ள நம்பிக்கையையும் வெளியிட்டார்.
தற்போது 30 இலட்சமாக உள்ள பன்னாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 72 இலட்சமாக மாறும் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் வேலியோ, பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்று பயிலும் இந்த மாணவர்கள் கலாச்சாரங்களின் தூதர்களாகச் செயலாற்றுகிறார்கள் என்பதையும் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் மற்றும் வழிப்போக்கர்களின் திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் இந்த மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து கூடியிருந்த அங்கத்தினர்களுக்கு விளக்குகையில், இவ்வெள்ளியன்று மாநாட்டு அங்கத்தினர்கள் அனைவரும் திருத்தந்தையைச் சந்திப்பது மாநாட்டின் உச்சகட்ட நிகழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.