2011-12-01 15:35:26

திருத்தந்தை: புதிய நற்செய்தி அறிவித்தல் குடும்பங்கைளைச் சார்ந்து உள்ளது


டிச.01,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் Familiaris Consortio என்ற அப்போஸ்தலிக்க ஏடு வெளியிடப்பட்டது மற்றும் குடும்பங்களுக்கான திருப்பீட அவை உருவாக்கப்பட்டது ஆகியவைகளின் 30ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி இடம்பெறும் அவ்வவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குபெறுவோரை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய நற்செய்தி அறிவித்தல் முக்கியமாக குடும்பங்களைச் சார்ந்தே உள்ளது என தன் உரையைத் துவக்கிய திருத்தந்தை, குடும்பங்களுக்கு எதிரான கோட்பாடுகளும் பாலுணர்வுத் தொடர்புடைய அறநெறிகொள்கைகளின் சீர்கேடும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன என எடுத்துரைத்தார்.
கடவுளைச் சமூகத்திலிருந்து விலக்க முயலும் போக்குகளும் குடும்ப நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாக இருப்பதால், புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது குடும்பத்திலிருந்து பிரிக்க முடியாதது ஆகிறது என மேலும் உரைத்தார் பாப்பிறை.
தம்பதியர்கள் கிறிஸ்துவின் அன்பை மட்டும் பெறவில்லை, மாறாக அந்த அன்பை பிறருக்கும் வழங்கி ஒரு மீட்பு சமூகமாக மாறுகிறார்கள் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, திருமணம் எனும் அருள் அடையாளத்தின் வழி உருவாக்கப்பட்ட குடும்பம், மீட்கப்பட்டதாகவும், மீட்பு சமூகமாகவும், நற்செய்தி அறிவிக்கப்பட்டதாகவும், நற்செய்தி அறிவிப்பதாகவும் உள்ளது என மேலும் கூறினார்.
2012ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை இடம்பெற உள்ள குடும்பங்களுக்கான 7வது உலக மாநாடு குறித்தும் இச்சந்திப்பின்போது நினைவூட்டினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.