2011-12-01 15:26:43

டிசம்பர் டிசம்பர் 02: வாழ்ந்தவர் வழியில்.... பாண்டித்துரைத் தேவர்


பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கத்தை அமைத்தவர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். தமிழகத்தின் பாலவநத்தம் என்ற ஊரில் 1867ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிறந்த இவர், செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி.யின் சுதேசிக்கப்பல் விடும் பணிக்குப் பொருள் உதவியும் செய்தவர். பாலவநத்தம் ஜமீன்தார், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர், தலைமைப் புலவர், செந்தமிழ் பரிபாலகர், தமிழ் வளர்த்த வள்ளல், பிரபு சிகாமணி, செந்தமிழ்ச் செம்மல் என்றெல்லாம் இவர் அழைக்கப்பட்டார். இவரது தந்தை பொன்னுசாமித் தேவர், இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராயிருந்தவர். பாண்டித்துரைத் தேவர் சிறுவனாக இருந்த போதே தந்தையை இழந்ததால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இளவயது முதற்கொண்டு தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றார். சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துக்கள் எல்லாம் பாண்டித்துரைத் தேவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் தமிழில் ஆர்வமும் பெற்றிருந்த பாண்டித்துரைத் தேவர், அதன் வளர்ச்சிக்காக தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார். இக்காலக்கட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர அரியணையில் அமர்ந்து, இவரின் தொண்டுகளுக்கு துணைபுரிந்தார் என்று சொல்லப்படுகிறது. அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியாவண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாத ஐயருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தனது ஆசிரியருள் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞான சம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமரான வள்ளல் பாண்டித்துரைத் தேவர் 1911ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாளன்று காலமானார். இவர் உயிர் துறந்ததை எண்ணி தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.








All the contents on this site are copyrighted ©.