2011-12-01 15:37:00

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு மாத ஓய்வூதியம் வழங்க உள்ளது


டிச.01,2011. சர்வதேச எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படும் இவ்வியாழனன்று உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதைப் பற்றியே நினைத்து கவலை கொண்டிராமல், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று கேரள முதல்வர் உமன் சாண்டி கூறினார்.
எய்ட்ஸ் பாதித்த நோயாளிக்கோ, அல்லது அவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ மாதம் ஒன்றுக்கு ரூ.400 ஓய்வூதியம் வழங்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. நோய் பாதித்தவர், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது அவருக்கு ரூ.120 கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மேலும் கூறினார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறை, இதன்மூலம் இந்தியாவில் கேரளாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் குறிப்பின்படி, கேரள மாநிலத்தில், 55,167 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.