2011-12-01 15:36:34

அரசியல் மற்றும் சமுதாய அளவில் ஒளிமிக்க எதிர்காலத்தைக் காண்போம் -மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர்


டிச.01,2011. இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்து எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது; அரசியல் மற்றும் சமுதாய அளவில் நாங்கள் விரைவில் ஒளிமிக்க எதிர்காலத்தைக் காண்போம் என்று மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Paul Zinghtung Grawng கூறினார்.
இப்புதன் முதல் வெள்ளி வரை அமெரிக்க ஐக்கிய நாட்டு (தலைமைச் செயலர்) வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் மியான்மாரில் மேற்கொண்டுள்ள பயணத்தைக் குறித்து தன் கருத்தை வெளியிட்ட பேராயர் Grawng இவ்வாறு கூறினார்.
ஹிலரி கிளிண்டன் மியான்மார் அரசுத் தலைவர்களைச் சந்திக்க இப்புதனன்று வந்திருப்பது தங்கள் நாட்டிற்கு முக்கியமான ஒரு திருப்பம் என்று Yangon பேராயரும் மியான்மார் ஆயர் பேரவையின் செயலருமான Charles Maung Bo கூறினார்.
இப்புதன் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் ஹிலரி கிளிண்டன் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் மியான்மார் அரசுத் தலைவர்களையும், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயையும் சந்திக்கிறார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் முக்கிய அரசு அதிகாரி தங்கள் நாட்டில் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் இங்கு இடம்பெற்று வரும் மாற்றங்களுக்கு ஒரு நல்ல அடையாளம் என்று கூறிய பேராயர் Maung Bo, தங்கள் நாடு குடியரசை நிலைநாட்டுவதற்கு இன்னும் பல வழிகளில் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
அமைதி, மற்றும் பன்னாட்டு கல்வித்தரத்திற்கு ஈடான கல்வி முறை ஆகியவை மியான்மாரில் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற்றம் அடைய வாய்ப்புண்டு என்று பேராயர் Maung Bo UCAN செய்தி நிறுவனத்திடம் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.